மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கத்தோலிக்க ஆலயங்களுள் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆயித்தியமலை புனித சதா சகாயமாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஆகஸ்ட் 30ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கரடியனாறு சந்தியிலிருந்து அன்னையின் திருச்சொருப பவனி ஆரம்பித்து ஆலயத்தை வந்தடைந்து, அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் அன்றுமாலை கொடியேற்றம் இடம் பெற்று முதலாம் நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தினமும் நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை காலை திருச்சுரூப பவனிமணிக்கு இடம் பெற உள்ளது. வழமைபோன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுணதீவு ஊடாகவும், மற்றுமொரு திருச்சுரூப பவனி செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்திலிருந்தும் ஆரம்பமாகி கரடியனாறு ஊடாகவும் இரு வழிப் பாதயாத்திரையாக ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தை வந்தடையும்.
திருத்தலத்தின் பெருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் எதிர்வரும் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு பெறும்.
படங்கள், தகவல்: கல்லடி
குறூப் நிருபர்