மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக பேரருட்திரு அன்டன் ரஞ்சித் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர் தமது பணிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 16 வருடங்களாக குருவாகவும் உதவி ஆயராகவும் அதனைத் தொடர்ந்து ஆயராகவும் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் பணிவாழ்வை முன்னெடுத்து வந்த ஆயர் பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை தமது பணியிலிருந்து ஓய்வு பெறும் நிலையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தினை பரிபாலிப்பதற்காக பரிசுத்த பாப்பரசரினால் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயர் அன்டன் ரஞ்சித் ஆண்டகை மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராக கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நியமிக்கப்பட்டு செப்டம்பர் முதலாம் திகதி தமது பணிகளை பொறுப்பேற்றுள்ளார்.
ஆயர் அன்டன் ரஞ்சித் ஆண்டகை மட்டக்களப்பு ஆயரில்லத்தில் ஓய்வு நிலை ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையினால் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து பேண்ட் வாத்திய அணிவகுப்புடன் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து புனித மரியாள் பேராலயத்தில் பதவியேற்பு விசேட திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இந் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் ஜோர்ஜ் ஜீவராஜ் அடிகளார்,சர்வ மதத் தலைவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பொது நிலையினர். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஐஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், விமானப்படை உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
விசேட திருப்பலியின் நிறைவில் புதுப் பொலிவு பெற்றுள்ள சாள்ஸ் மண்டபத்தினை ஓய்வு நிலை ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்ட புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகர் கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை ஆகிய இருவரும் இணைந்து உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் தகவல்:கல்லடி
குறூப் நிருபர் உதயகாந்த்