க
த்தோலிக்கத் திருச்சபையானது செப்டம்பர் 8ஆம் திகதி அன்னை மரியாளின் பிறப்புத் திருவிழாவை கொண்டாடுகிறது.
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை கத்தோலிக்கத் திருச்சபை கிறிஸ்மஸ் பண்டிகையாக கொண்டாடுவது போன்று திருச்சபையின் மாபெரும் சிறப்பு திருவிழாவாக அன்னையின் திருவிழாவும் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
கருவின்போதே கறையொன்றும்
படியாத இறைமகளாய்
அழைப்பு பெற்றவளே மாமரி.
அருள் நிறைந்த மரியே! என்று
அன்று வானதூதரால் வாழ்த்துப்
பெற்ற அழகின் முழுமையானவள்
நம் அன்னை மரியாள்.
அனைத்து அருள் வரங்களோடு அழகில் மிளிர்பவள்! ஆதவனை ஆடையாய் அணிந்த சுடரொளி அவள். படைப்புகளிலே ஜென்மப் பாவம் அறியாதவள்.
சாலமோனின் எழினிகளைப் போல்அழகு வாய்ந்தவள் அன்னை மாமரி. காண்போரை கவர்ந்திழுக்கும் காந்தசக்தி அவரிடம் உண்டு.மரகதம் சூடிய வானவில் போன்ற அரியணை அவளது.
சுவக்கின்- அன்னம்மாள் கருவறையில் வரையப்பட்ட வண்ண ஓவியம் மரியாள்.
அன்று வான தூதரின் வார்த்தைகளை “அப்படியே ஆகட்டும்” என்று தாழ்ந்து ஏற்றவள் நற்செய்தியின் முதல் சீடராக யூதேயா மலைநாட்டிற்கு கடந்து சென்றவள்.மனிதநேயம் அங்கே நிரம்பி வழிந்தது.மரியாள் அருள் ஊற்றாகி முழுமையானாள்.
அன்னை அன்பின் நிறைகுடம் பிறர் குறை நீக்கும் மணிமகுடம்! கருணையின் ஊற்று! மீட்பின் அருள்கொடை அவர்.
இறைவனின் மீட்புத் திட்டத்தில் அன்னை மரியாள்;
அன்னை மரியாளைத் தவிர்த்து விட்டு இறைவனின் திட்டத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது. இறைவனின் மீட்புத் திட்டத்தின் துவக்கமும், முடிவுமாய் அவர் இருக்கிறார்.
பாவத்தில் விழுந்து கிடந்த மனுக்குலத்தை மீட்பதற்காக இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். மனுக்குலத்தின் பாவங்களுக்கு விலையாக தனது உயிரையே சிலுவையில் கையளித்தார். பின் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து தந்தையிடம் மீண்டும் இணைந்திருக்கிறார். அவரை விசுவாசித்து, ஏற்றுக்கொண்டு, பாவங்களை அறிக்கையிட்டு அவரிடம் சரணடைபவர்களுக்கு மீட்பை அவர் வழங்குகிறார். இதுவே இறைவனுடைய மீட்பின் திட்டம்.
இந்த மீட்புத் திட்டத்தின் முதல் படியான “மனித அவதாரம்” அன்னை மரியாளிடம் தான் துவங்குகிறது. உலகம் முழுவதையும் தனது கண்களால் ஊடுருவிப் பார்த்த தந்தையின் கண்களுக்குப் புனிதமும், இறைத் தன்மையும் நிறைந்த ஒரே ஒரு இளம் பெண் தான் தென்பட்டார். அவர் தான் மரியாள்.
இறைவனின் மீட்புத் திட்டத்தின் துவக்கப் புள்ளி அன்னை மரியாளிடம் கபிரியேல் தூதர் உரைத்த “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” எனும் இறைவார்த்தையில் துவங்கியது.
அவமானங்களும், அசௌகரியங்களும் புறந்தள்ளி இறைமகன் இயேசுவை ஈன்றெடுத்தார் அன்னை மரியாள். மண்ணிற்கு மனுமகனாய், தனக்குத் தலைமகனாய் தொழுவத்தின் முன்னணையில் இயேசு பாலனை கிடத்தியபோது மீட்பின் விடியல் தனது முதல் வெளிச்சக் கீற்றுகளை வெளியிட்டது. தொழுவம் தொழுகை பெற்ற நிகழ்வின் பின்னணியில் அன்னை மரியாளின் அர்ப்பணிப்பும், தியாகமும் நிலைத்திருந்தன.
பன்னிரண்டு வயதில் காணாமற் போன மகனை ஆலயத்தில் கண்டுபிடித்தார் அன்னை மரியாள். இயேசுவின் ஆன்மீகப் பயணத்தின் வழியை புரிந்து கொண்ட அன்னை அமைதிகாத்தார். ‘அறிவிலும் ஞானத்திலும்’ இயேசுவை வளர்த்த அன்னை மரியாள் இயேசுவின் மீட்புத் திட்டத்தின் பயணத்தில் தொடர்ந்து பயணிக்கின்றார்.
‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’ என இயேசுவை நோக்கி கையை நீட்டிய அன்னை மரியாள் புதுமையின் முதல் சுவடுக்கு காரணமாகிறார். மனுமகனை இறைமகனாய் அடையாளம் காட்டியவை அற்புதச் செயல்களும், அடையாளச் செயல்களுமே. அவற்றின் முதல் புள்ளி அன்னை மரியாளினால் துவங்கி வைக்கப்பட்டது இறைசித்தமன்றி வேறில்லை. இயேசுவின் மீட்பின் பயணத்துக்கான வழியில் அன்னையின் பங்களிப்பு தொடர்ந்தது.
திருமதி அருள்சீலி அந்தோனி