ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போதும் நாம் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இருந்தோம். அன்று தொடக்கம் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன், முற்போக்கு தமிழ் தேசிய கட்சியும் இணைந்து பயணிக்கிறது.
உழைக்கும் பாட்டாளி மக்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாக நாம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதசாவிடம் முன் வைத்துள்ளோம். பாட்டாளி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்த வேண்டும், அவர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். இவற்றுக்கு எல்லாம் எம்மிடம் அரசியல் அதிகாரங்கள் காணப்பட்டாலே அவற்றினை நாம் மேம்படுத்த முடியும்.அதனால் பாட்டாளி மக்களுக்கு அரசியல் அதிகாரங்கள் தேவை என பிரதானமாக கோரியுள்ளோம்.
எமது கோரிக்கைகளை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் எமது ஆதரவை நாம் அவருக்கு வெளிப்படையாக தெரிவித்துள்ளோம். இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியும் , சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக நேற்றைய தினம் அறிவித்துள்ளார்கள். அதனை நாம் வரவேற்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
(யாழ் . விசேட நிருபர்)