எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து பேருவளை நகர சபை பிரதேசத்திற்குட்பட்ட ஹெட்டியாகந்த பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பேருவளை நகர சபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் ஹஸன் பாஸி தலைமையிலான குழுவினர் பிரதேச பகுதிகளில் வீடு வீடாகச்சென்று சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹஸன் பாஸி, இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நாட்டின் தலைவரை தெரிவு செய்யும் முக்கியத்துவம்வாய்ந்த தேர்தலாகும். இத்தேர்தலில் பல கட்சிகளைச் சேர்ந்தோர் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர்.
இருந்தபோதிலும் நாட்டிலுள்ள பெரும்பான்மையினர் ஆட்சிமாற்றமொன்றை எதிர்பார்த்து இம்முறை சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இன்றைய பிரசாரத்தின்போதும் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க விரும்புவதை அவதானிக்க முடிந்ததாகவும் ஹஸன் பாஸி மேலும் தெரிவித்தார்.