தமிழ், சிங்கள, முஸ்லிம் பேதங்களை மறந்து மூவினங்களும் ஒற்றுமைக்கு மத்தியிலேயே அரசொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் முதலில் அரசியல்வாதிகள் முன் உதாரணமாக இருப்பதன் மூலமாகவே நாட்டை கட்டயெழுப்ப முடியும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கா தெரிவித்தார்.
அக்குறணையில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சகல இனங்களும் ஒற்றுமையாக வாழும் சூழல் ஏற்படுத்தப்படும், அதற்கான புதிய அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்படும்.
மற்றவர்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சிக்கு வருவதன் மூலம் ஒற்றுமையை உருவாக்க முடியாது. தமிழ், சிங்கள, முஸ்லிம் பேதங்களை மறந்து மூவினங்களும் ஒற்றுமைக்கு மத்தியிலேதான் அரசொன்று உருவாக்கப்பட வேண்டும்.நாம் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி மாளிகை கொழும்பில் மட்டுமே இருக்கும். ஏனையவைகள் மாற்றபடும். சஜித் பிரேமதாசவுடன் இணைந்துகொண்டுள்ள பலர் எமது கதவுகளையும் தட்டினர். அவர்களுக்கு எமது கதவுகள் திறக்கப்படமாட்டாது. ஏனெனில் நாம் ஒரு கொள்கை ரீதியில் இயங்குபவர்கள்.
நாம் ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர்களின் எண்ணிக்கையை 25 ஆகக் குறைத்து அதற்கேற்றவாறு பிரதி அமைச்சர்களையும் நியமிப்போம். எமது ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அமைச்சர்களுக்கோ அரச வீடுகளை வழங்க மாட்டோம். இலவசமாக மின்சாரம் வழங்க மாட்டோம். முதலில் நாம் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
(அக்குறணை குறூப் நிருபர்)