எதிர்காலத்தில் மலரவுள்ள சஜித் பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் வடக்கையும்-தெற்கையும் விளையாட்டுத்துறையின் ஊடாக இணைக்கின்ற ஓர் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
நாம் இப்போது மிகவும் தீர்மானம் மிக்க தேர்தலொன்றை நோக்கி நகர்ந்து செல்கிறோம்.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பலம் வாய்ந்த இடத்தில் உள்ளது.
சஜித் பிரேமதாச தலைவரோடு 4 வருடங்களுக்கு முன்னர் இணைந்து கொண்டேன். சிறந்த தலைமைத்துவத்துக்கான வேலைத்திட்டம் அவரிடம் உள்ளது.
அதனால் தான் அவரோடு இணைந்து இந்த அரசியல் பயணத்தில் இணைந்துள்ளேன்.
ஒரு நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல சிறந்த தலைமைத்துவம் வேண்டும். அத்தோடு சிறந்த குழுவும் எம்மிடம் உள்ளது. சிறந்த தலைமைத்துவமும் குழுவும் இணையும் போது நாட்டை முன்னோக்கி செல்ல முடியும்.
எதிர்காலத்தில் வடக்கையும் தெற்கையும் விளையாட்டுத்துறை ஊடாக இணைக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளோம். வட மாகாண விளையாட்டு வீரர்கள் தேசிய மட்டத்திற்கு செல்வது மிகக் குறைவு. வடக்கு மாகாண விளையாட்டுத் துறையை மேம்படுத்தி வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களுடைய திறன்களை வளர்ப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம்.
இதற்காக வேலைத்திட்டங்களை சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழ் முன்னெடுப்போம் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
(கரவெட்டி தினகரன் நிருபர்)