Wednesday, September 11, 2024
Home » குறிஞ்சாக்ேகணி பாலத்தை நிர்மாணிக்க ஏற்பாடுகள்

குறிஞ்சாக்ேகணி பாலத்தை நிர்மாணிக்க ஏற்பாடுகள்

சவூதி நிதியம் நிதியுதவி

by Gayan Abeykoon
September 3, 2024 2:48 am 0 comment

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வீதியின் பாலத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அண்மையில் அமைச்சரவை அனுமதி வழஙகியுள்ளதையடுத்து சவூதி அரேபியாவின் சவூதி நிதியத்தினால் இப்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறிஞ்சாக்கேணி மக்களினதும் கிண்ணியா மக்களினதும் மிக நீண்டகாலத் தேவையாகவும் கோரிக்கையாகவுமிருந்த இப்பாலம் புனரமைக்கப்படாமையால் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.  குறிஞ்சாக்கேணி பின்தங்கிய கிராமமாகும். இங்கு அதிகமானோர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். கூலித்தொழிலாளர்களே அதிகம் வாழ்ந்து வருகின்றனர். குறிஞ்சாக்கேணியையும் கிண்ணியாவையும் இணைக்கும் பாலமாகவே இப்பாலம் உள்ளது. இக்கிராம மக்கள் தமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள கிண்ணியாவுக்கே செல்ல வேண்டியுள்ளது. எனவே இப்பாலம் அவர்களுக்கு இன்றியமையாததாகும்.

இம்மக்கள் அடிப்படை போக்குவரத்து வசதிகள்  இல்லாமலேயே நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். உரிய முறையில் பாலம் நிர்மாணிக்கப்படாமையினால் இவர்கள் பணம் கொடுத்து படகு சேவையைப் பயன்படுத்தி  வருகின்றனர். இதற்காகப் பயன்படுத்தப்பட்ட படகு தரமற்று இருந்ததாலேயே செய்யப்படாமையினாலேயே மேற்படி படகுவிபத்து இடம்பெற்றது.

2021 ஆம் ஆண்டு அன்றைய வீதி அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராகவிருந்த நிமில் லன்ஸாவினால் இதன் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டாலும், இப்பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டன. இப்போது இதற்கான நிதியை வழங்க சவூதி அரேபியா முன்வந்ததையடுத்து இதற்கான புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தத்திற்கான அனுமதியை அமைச்சரவை அண்மையில் வழங்கி இருந்தது.

இதற்கான நிதியை சவூதி அரசாங்கத்திடமிருது பெற்றுத்தருமாறு அரசாங்கமும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் மற்றும் பொதுஅமைப்புக்கள் கோரிக்ைக விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கான சவூதி அரேபியத்தூதுவர்  காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி மேற்கொண்ட முயற்சியையடுத்து பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.  இதன் காரணமாக இப்போது இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தங்களது நீண்டகாலத் தேவையான இப்பாலத்தை நிர்மாணிக்க ஒத்துழைப்புகளை வழங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வீதி அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கும்,  பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக்கிற்கும், சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானிக்கும் இம்மாவட்ட மக்கள் மற்றும் கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பொதுஅமைப்புக்களால் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஹர் ஆதம்  

கல்முனை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x