வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 06 சொக்லேட் டின்களுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 11கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் மலேஷிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெல்லன்வில ஹோட்டலில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மலேஷிய பெண்ணிடமிருந்து 03 கிலோ 610 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள், கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்மைக் காலத்தில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான கொக்கேய்ன் தொகை இதுவென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பெல்லன்வில ஹோட்டலை சுற்றிவளைத்து சோதனைசெய்த போது மலேஷிய பெண் கைது செய்யப்பட்டதாகவும், இந்த சோதனையின் போது, கொக்கெய்ன்
போதைப்பொருளை சந்தேகநபர் வைத்திருந்த கறுப்பு நிறத்திலான பயணப் பையில் வைத்திருந்த 06 சொக்லேட் டாப்பாக்களுக்குள் சிறிய சொக்லேட் உருண்டைகள் வடிவில் 172 கொக்கெய்ன் உருண்டைகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இப்பெண், மலேஷியாவிலிருந்து டுபாய் சென்றுள்ளார். அங்கு கறுப்பின நபர் ஒருவர் வழங்கிய கொக்கைன் கையிருப்புடன் 29 ஆம் திகதி இலங்கை வந்து நான்கு நாட்கள் பெல்லன்விலையில் தங்கி கொக்கையினை வழங்க திட்டமிட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் தடுப்புக்காவல் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகளுக்காக நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்த தலைமையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.