பதுளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கர்ப்பிணி பெண்ணொருவர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை ஹிந்தகொடை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (1) இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது கணவனின் கட்டுத் துவக்கினால் இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில், சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 35 வயதான கணவனை கைதுசெய்துள்ள பொலிஸார் அவரிடமிருந்து, கட்டுத்துவக்கு ஒன்று, கைக்குண்டு ஒன்று, எஸ்.ஜீ ரக தோட்டா ஐந்து, துவக்கு உதிரிப் பாகங்கள் மற்றும் கார் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாது,
குறித்த, சந்தேகநபர் சில காலம் இராணுவத்தில் சேவையாற்றி, பின்னர் பதுளை நகரிலுள்ள பொதி விநியோகிக்கும் நிறுவனமொன்றில் முகாமையாளராக கடமையாற்றி வருவதாகவும், அதே நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணொருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்விடயம் குறித்த நபரின் மனைவிக்கு தெரியவந்துள்ள நிலையில், எழுந்த வாக்குவாதம் முற்றி துவக்கு சூட்டில் முடிவடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
(ஊவா சுழற்சி நிருபர்)