பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றியீட்டிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முதல் முறையாக பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சரித்திரம் படைத்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷ் அணி டெஸ்ட் தொடர் ஒன்றை வெல்வது இது முதல்முறை என்பதோடு சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் தவிர்த்து பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றை வென்றிருப்பதும் இது முதல் முறையாகும்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் ஆடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் பாகிஸ்தானுடன் டெஸ்ட் வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்து தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பானது. இந்த போட்டிக்கான முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக இரத்து செய்யப்பட்டது. 2வது நாள் ஆட்டத்தின் போது நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 274 ஓட்டங்களும், பதிலுக்கு பங்களாதேஷ் தனது முதல் இன்னிங்சில் 262 ஓட்டங்களும்எடுத்தன.
12 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் 4ஆவது நாளான நேற்று 185 ஓட்ட இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 4 விக்கெட்களை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியீட்டி தொடரை 2-0 என கைப்பற்றியது.