Thursday, October 10, 2024
Home » அரச ஊழியர்களை அரச வரிச்சுமைகளில் இருந்து மீட்டு அவர்களது சேவைக்கான அங்கீகாரத்தை வழங்குவோம்

அரச ஊழியர்களை அரச வரிச்சுமைகளில் இருந்து மீட்டு அவர்களது சேவைக்கான அங்கீகாரத்தை வழங்குவோம்

- குறைந்தபட்ச அடிப்படைச்சம்பளம் ரூ. 57,5000

by Rizwan Segu Mohideen
September 3, 2024 1:31 pm 0 comment

– 6-36% வரி 1-24% ஆக குறைக்கப்படும்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% ஆக அதிகரிப்பதோடு, வழங்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவை கொடுப்பணவை 25,000 ரூபா வரை அதிகரித்து, அடிப்படை சம்பளத்தை 57,500 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம். அரச ஊழியர்களையும் மத்திய வகுப்பினரையும் அரசாங்கத்தின் வரிச்சுமையிலிருந்து விடுவித்து 6- 36% வரையாக காணப்படுகின்ற வரி சூத்திரத்தை 1 – 24% வரை குறைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த மக்கள் பேரணித் தொடரின் 30 ஆவது பேரணி, நேற்று (02) முல்லைத்தீவு நகரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்தோடு சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்கு வழங்கப்படுகின்ற 15% வட்டியை தொடர்ந்து வழங்குவதோடு, ஓய்வூதிய கொடுப்பனவையும் சரியாக வழங்க நடவடிக்கை எடுப்போம். பாதுகாப்பு துறையில் உள்ளவர்களுக்கான கொடுப்பனவுகளையும், பதவி உயர்வுகளையும் சரியான முறையில் வழங்குவோம். பொலிஸாருக்கு தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 3 மாதத்துக்கான மேலதிக கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கல்வித்துறையும் சுகாதாரத் துறையும் விரிவுபடுத்துவதோடு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பிரபஞ்சம், மூச்சு, போன்ற வேலைத்திட்டங்களின் ஊடாக ஒரு பில்லியன் பெறுமதியான சேவைகளை கல்விக்கும் சுகாதாரத்துக்கும் செய்திருக்கின்றோம். தான் சொல்வதைச் செய்கின்ற, செய்வதைச் சொல்கின்ற நபர் என்ற அடிப்படையில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் இந்த மண்ணின் நிதர்சனமாக அதனை உண்மைப்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

மீண்டும் கம் உதாவ யுகத்தை உருவாக்குவோம்
பெண் தலைமைத்துவம் உள்ள குடும்பங்களுக்கு விசேட வாழ்வாதார செயற்திட்டத்தை ஆரம்பிப்போம். அங்கவினர்களுக்காக விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதன் ஊடாக அவர்களை பொருளாதாரத்தின் பங்காளர்களாக இணைத்துக் கொள்வதற்கான பாரிய வேலை திட்டத்தையும் முன்னெடுப்போம். கோட்டாபய, ரணில் விக்ரமசிங்க ஆகிய ஜனாதிபதிகளுடைய காலத்தில் நிறுத்தப்பட்ட வீடமைப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதோடு, காணி இல்லாதவர்களுக்கும், வீடு இல்லாதவர்களுக்கும் கம் உதாவ யுகத்தை மீண்டும் உருவாக்கி தீர்வை பெற்றுத் தருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு நாட்டின் பல பகுதிகளில் காணிப்பிரச்சினை காணப்படுகின்றது. காணி இல்லாதவர்களும், காணி கிடைக்க பெறாதவர்களும், காணி இருந்தும் உறுதிப் பத்திரம் இல்லாதவர்களும் இருக்கின்றார்கள். இதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை தாபித்து, அதன் ஊடாக காணி இருந்தும் உறுதிப் பத்திரம் இல்லாதவர்களுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதிகாரத்தை கோரும் மாற்று நபர்களும் ஜனாதிபதியும் நாட்டுக்கு செய்தது எதுவும் இல்லை
இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை ஜனாதிபதி உட்பட அனைவரும் முன் வைத்திருக்கின்றார்கள். திட்டங்களை முன் வைப்பதற்கு பதிலாக சேவைகளை செய்வதையே ஜனாதிபதி செய்ய வேண்டும். இந்த பதில் ஜனாதிபதி அவருடைய பதவி காலத்தில் எந்த ஒரு தொழிற்சாலையும் உருவாக்கவில்லை. அதிகாரத்தை கோருகின்ற மாற்று நபர்களும் தொழிற்சாலைகளை உருவாக்குவதை விட அவற்றை தீயிட்டு கொளுத்துவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவோம்
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக வடகிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்ற, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டின் ஊடாக இந்த வேலை திட்டங்களுக்கு அதிகளவான உதவிகளைப் பெற்றுக் கொண்டு, பெருந்துகையான வெளிநாட்டு உதவியைப் பெற்றுக் கொண்ட யுகமாக இந்த யுகத்தை மாற்றுவோம். அதனூடாக நாட்டுக்கு அபிவிருத்தியை கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடற்றொழிலாளர்களுக்கான சலுகைகள்
மீன்பிடித் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுகங்கள் நங்கூரமிடக்கூடிய நிலப்பிரதேசங்கள் என்பனவற்றை சர்வதேச நிவாரணங்களை மையப்படுத்தி விருத்தியடையச் செய்வதோடு, மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். அத்தோடு ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தி துறையின் ஊடாக மீன்பிடித் தொழிலை உயர்ந்த மட்டத்திற்கு அபிவிருத்தி அடையச் செய்யவும் நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிலையான எரிசக்திக்கு முன்னுரிமை
சூரிய சக்தி மற்றும் நிலையான எரிசக்தி கட்டமைப்பை ஏற்படுத்தி, ஸ்தீரமான எரிசக்தி கட்டமைப்புக்கு முன்னுரிமை வழங்கி, தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும். அதற்காக மாங்குளம் பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி மத்திய நிலையமொன்றை உருவாக்கி, அதனூடாக வீட்டுப் பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியும். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர் யுதிகளுக்காக தொழிற்சாலைகளை உருவாக்குவதோடு, அதனூடாக நேரடியாக வெளிநாட்டு முதலீட்டையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வனவிலங்கு சுற்றுலாத் துறையில் ஈடுபடுதல்
விவசாயத்தையும் சுற்றுலாத்துறையின் மேம்படுத்த வேண்டும். வனவிலங்கு பிரதேசங்களை வளமாக மாற்றி, வன ஜீவராசிகளை மையமாகக் கொண்ட சுற்றுலாத் துறைக்கான புதிய வேலை திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி, சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கு, சுற்றுலா நகரங்களை உருவாக்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிரான திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்
ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டங்களை சரியான முறையில் நிறைவேற்றி, நாட்டில் இருந்து திருடப்பட்ட அனைத்து சொத்துக்கள், பணம் என்பன மீண்டும் நாட்டுக்கு கொண்டு வரப்படும். நாட்டுக்கான வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x