காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பணயக்கைதிகளின் சடலங்களை மீட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதை ஒன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை (31) இந்த உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இந்தப் பணயக்கைதிகளை அடைவதற்கு முன்னர் இவர்கள் கொடியமுறையில் கொல்லப்பட்டிருப்பது ஆரம்பக்கட்ட ஆய்வில் இருந்து தெரியவருவதாக இஸ்ரேல் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலங்;களில் அமெரிக்க இஸ்ரேலியர் ஒருவரும் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இவர்களை கொன்றவர்களை நீதிக்கு முன் நிறுத்தும் வரை ஓயப்போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். எனினும் நெதன்யாகு நாட்டு மக்களுக்கு முன் பணயக்கைதிகளை கைவிட்டதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பணயக்கைதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பலஸ்தீன போராளிகள் சுமார் 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்தனர். தொடர்ந்தும் நூறுக்கும் அதிகமான பணயக்கைதிகள் உயிருடன் அல்லது மரணித்த நிலையில் பலஸ்தீன போராளிகளின் பிடியில் இருப்பதாக நம்பப்படுகிறது.
இவர்களை மீட்கும் பேச்சுவார்த்தை முன்னேற்றம் இன்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.