Monday, October 7, 2024
Home » யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 101

யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 101

by damith
September 2, 2024 1:45 pm 0 comment

விதை விதைக்கிறோம், மரம் வளர்கிறது. மரத்திற்கு மூலமாக விளங்குவது விதையாகும். அதே போல மனித வாழ்க்கைக்கும் ஒரு மூல விதை உள்ளது. அதனை நாம் கடவுள் என்றும், பரப்பிரம்மம் என்றும் பரமாத்மா என்றும் பகருகிறோம். மூலவிதையான பரமாத்மாவிடமிருந்து நாம் விலகிச் செல்வதால் தான் மனிதர்களாகிய நாம் அமைதியிழந்து, புனிதம் கெட்டு தனிப்பட்டு நிற்கிறோம்.

வாழ்க்கையின் மூலாதாரமாக இறைவனுடன் நாம் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் மனம் விசாலமடையும். சமுதாயக் கடலில் மூழ்குவதால் தனி மனிதன் தன்னுடைய அகந்தை, சுயநலம். பதுக்கல், ஹிம்சை. சூழ்ச்சி போன்ற தீயவைகளிலிருந்து விடுபடமுடியும். பரமாத்மாவுடன் ஒன்று சேர்வதால். பொறாமை, தனிமை மரண பயம் போன்றவை நீங்கும். விளங்கும்

நாலாபுறமும் பரவியிருப்பது மரத்தின் இயல்பு, நாமும் பரந்த மனப்பான்மையுடன் செயல் புரிவோம். வீடு, குடும்பம், சமூகம், தேசம். உலகம் ஆகியவைகளுடன் அன்பு, பாசம், மரியதை நற்குணம் வெளிப்படுத்துவோம். நிழல் வேண்டுவோர்க்கு நிழலாகவும், மழை வேண்டுவோர்க்கு மழையாகவும், உதவி வேண்டுவோர்க்கு உதவி வழங்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். தனி மனிதனாக இருந்து உதவுவதை விட சமூகத்துடன் சேர்ந்து உதவும் போது பரந்தளவில் உதவிட முடியும்.

நம் நிலை உயரும் போது நாம் கடவுளை மறந்து விடக் கூடாது. மறந்தால் மீண்டும் நாம் ஜடப் பொருளாகி விடுவோம். அந்த ஜடப் பொருள்களிலிருந்து விலகி, மேம்பட்டு இறைவனை பரமாத்மாவை அடைவதற்காகத்தான் இந்த நமக்கு மானுடப்பிறவி கிடைத்துள்ளது.

சின்னதாக ஒரு சங்கடம் வந்து விட்டாலே பலர் பெரிய அளவில் பயந்து குய்யோ முய்யோ என கதறுவதை நாம் பார்த்துள்ளோம். கடவுள் மீதே அவர்களுக்கு அவநம்பிக்கை வந்து விடுகிறது. இது முறையல்ல, சரியல்ல. வாழ்வில் எந்நேரமும், எப்போதும் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதற்காக, நாம் கலங்கி விடக் கூடாது. இம்மாதியான சங்கடங்கள் கடவுள் தன் குழந்தைகளிடம் விளையாடும் ஒரு விளையாட்டு என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பேப்பரில் வரையப்பட்ட பூதம், சிங்கம், புலி போன்ற முகமூடி அணிந்து கொண்டு ஒரு தந்தை குழந்தைகளிடம் வேடிக்கை காட்டுவது போலவே சில சங்கடங்களை தந்து கடவுள் நம்மிடம் விளையாடுகிறார். தன் தந்தை முகமூடி அணிந்து பயப்படச் செய்வதை பழகிப்போன பின் குழந்தை பயப்படுவதை நிறுத்திக் கொள்ளும். இதே போல் சங்கடங்கள் தாங்கி கொள்ளக் கற்றுக் கொள்ளும் போது எப்பிரச்சனைகளையும் எதிர்த்து போராடும் குணம் நமக்கு உண்டாகும்.

கடவுள் மீது முழு நம்பிக்கை கொள்ளாதவனுக்குத் தான் பிரச்சினைகள் பயமுறுத்தும். அப்படிப்பட்டவன் தான் சூழ்நிலையை கண்டு பயப்படுகிறான். எவன் கடவுளிடம் முழு நம்பிக்கை வைத்துள்ளானோ, கடவுளை சர்வ ஒருவன் வல்லமை படைத்தவனாகக் கருதுகிறானோ, கடவுள் நிச்சயம் நமக்கு கருணை காட்டுவார் என நம்புகிறானோ, கடவுளை தாய் தந்தையாக கருதுகிறானோ அவனுக்கு எந்த சூழ்நிலையும் நல்லதையே செய்யும். கடவுளின் தொடர்பை துண்டித்துக் கொண்டவனே அனைத்திற்கும் பயப்படுவான்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x