கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E- விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டி கடந்த திங்கட்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இது சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமராகிய முஹம்மத் பின் சல்மான் ஆதரவின் கீழ் நடைபெற்றது.
கடந்த 8 வாரங்களாக நடைபெற்று வந்த இந்த E- விளையாட்டுக்கள் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க உலகெங்கிலும் இருந்து பல கழகங்களின் வீரர்கள் முதல்முறையாக ரியாத்துக்கு வந்தனர். 60 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பரிசுத்தொகையுடன், இந்நிகழ்வு சுமார் 500 அணிகளையும் 1,500 தொழில்முறை வீரர்களையும் ஈர்த்தது, இது E- விளையாட்டுக்கள் வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாகும்.
இந்நிகழ்வின் இறுதியில் 2024 ஆம் ஆண்டுக்கான E- விளையாட்டுக்கள் உலகக் கிண்ணத்தின் சாம்பியன்களாக சவூதியின் ஒரு குழுவான Team Falcons தெரிவாகியது. உலகக் கிண்ணத்தை அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் கையளித்தார். Falcons கிளப் மொத்தம் $7 மில்லியன் பரிசுத் தொகையைப் பெற்றதோடு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் சிறந்த கழகமாகவும் தெரிவானது.
Call of Duty: Warzone மற்றும் Free Fire சம்பியன்ஷிப் ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பெற்று, 12 போட்டிகளில் 5,665 புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் Falcon அணி முன்னிலை வகித்தது.
இந்நிகழ்வானது கேமிங் மற்றும் E- விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் மற்றும் ஆர்வமுள்ள சாராரை ஒன்றிணைக்கும் நோக்கில், சர்வதேச E-விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், E- விளையாட்டுக்களை தயாரிப்பவர்கள் மற்றும் வெளியீட்டாளர்களை ஒரே குடையின்கீழ் கொண்டு வந்தது.
இந்த E-விளையாட்டுப் போட்டியானது அதன் தனித்துவமான multi-game மற்றும் multi-genre வடிவமைப்புடன், உலகின் தலைசிறந்த கிளப்புகளுக்கு இடையேயான போட்டிகளைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், E-விளையாட்டுக்கள் துறையை முன்னேற்றுவதற்கான சர்வதேச நிறுவனங்களின் முயற்சிகளையும் மேலும் உரமூட்டியது.
இந்நிகழ்வானது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்நிகழ்வுக் காலத்தில் ரியாத் நகருக்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளது. இந்நிகழ்வின் போது 32 இற்கும் மேற்பட்ட மேலதிக பொழுதுபோக்கு மற்றும் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வானது 500 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் ஈர்த்து மொத்தம் 250 மில்லியனுக்கும் அதிகமான மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான ஒரு புதிய உலக சாதனையாகவும் இது அமைந்துள்ளது.
கேமிங் மற்றும் E-விளையாட்டுக்கள் துறையானது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் முதலீட்டு மற்றும் தொழில் துறைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் உலகளாவிய சந்தையில் சுமார் $200 பில்லியனை எட்டியுள்ளது. சவூதி அரேபியா அன்மைக்காலத்தில் முக்கிய உலகளாவிய நிகழ்வுகளை நிகழ்த்துவதிலும் அந்நிகழ்வுகளை நோக்கி சர்வதேச மக்களை ஈர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டுள்ளது. அந்த வரிசையில் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியை நடத்தியமையும், 2025 ஆம் ஆண்டு E-விளையாட்டுக்களுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான அறிவிப்பை சவூதி வெளியிட்டமையும் அடங்குகின்றன.