இலங்கை மக்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்களாக இருந்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
இது தொடர்பாக இவர் இன்று (01) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டை அடுத்த ஐந்து வருடங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே கொடுத்து பார்க்க வேண்டும், ஜனநாயக நாடுகளில் முதல் பதவி காலத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதியின் செயற்பாடுகள் திருப்தியாகவும், நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்தால் மக்கள் அவருக்கு மீண்டும் ஒரு பதவி காலத்தை வழங்குவார்கள்.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளை முன்னுதாரணமாக கொள்ள முடியும். ஆனால் எமது நாட்டில் ஏற்பட்ட நிலைமை வித்தியாசமானது. ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி பொறுப்பு வழங்கப்பட்ட கோத்தாபய ராஜபக்ஸவின் ஆட்சி மக்களுக்கு திருப்தி கொடுக்கவில்லை.
இதனால் மக்களின் எதிர்ப்பலையால் முழுமையான பதவி மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே அவர் ஆட்சியில் இருந்து விலக நேர்ந்தது. இந்நிலையில் எமது நாட்டின் அரசியல் அமைப்பின்படி மக்களின் வாக்குகளால் அன்றி மக்களால் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட பிரதிநிதிகளால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
இவர் பதவியேற்றபோது மிக பாரதூரமான பொருளாதார நெருக்கடி நாட்டில் புரையோடி காணப்பட்டது. நாட்டை பழைய நிலைக்கு மீட்டு எடுக்க கடந்த இரு வருடங்களையும் அவர் கச்சிதமாக பயன்படுத்தினார். இப்போது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டிருக்கின்ற தருணத்தில்தான் தேர்தல் வந்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் அவரால் ஏற்படுத்தி தரப்பட்ட முன்னேற்றங்களை மக்களாகிய நாம் ஏற்று கொண்டிருக்கின்றோம். எனவே நாம் ஜனநாயக விழுமியங்களை மதிப்பவர்களாக நடந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக ஏற்று கொள்ள வேண்டும். நாட்டை அடுத்த கட்ட அபிவிருத்தி கொண்டு செல்ல அவருக்கு கட்சி அரசியலுக்கு அப்பால் வாய்ப்பு வழங்க வேண்டும்.
இவர் தூர நோக்குடைய செயல் திட்டங்களை வைத்திருக்கின்றார். இளையோர்களுக்கான தொழில் வாய்ப்பு, குடும்பங்களுக்கான வாழ்வாதாரம், வீட்டு திட்டம், பிராந்தியத்தின் சிறந்த தகவல் தொழினுட்பம் , சகல இனங்களுக்கும் சமவுரிமை போன்ற தூர நோக்கு திட்டங்களூடாக இலங்கையர்களாக நம் எல்லோரையும் பெருமை அடைய செய்ய வல்லவராக விளங்குகின்றார் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலுவில் விசேட நிருபர்