Tuesday, October 8, 2024
Home » போராட்டங்களை முன்னெடுப்பதற்கு வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு

போராட்டங்களை முன்னெடுப்பதற்கு வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு

by Prashahini
September 1, 2024 4:44 pm 0 comment

வவுனியா நகரில் இன்று (01) ஆர்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு காணாமல் ஆக்கப்பட்ட சங்கங்களை சேர்ந்த நால்வருக்கு வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக இன்று வவுனியா வருகைதரவுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம் குறித்த நான்கு பேருக்கும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சிவாநந்தன் ஜெனிட்டா, தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர்சங்கத்தின் இணைப்பாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமார், அந்த சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா, மற்றும் காணாமல்போன அமைப்பை சேர்ந்த சண்முகநான் சறோஜாதேவி ஆகியோருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரும் வவுனியா நகரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 6.00 மணிவரையான காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைக் கோவையின் பிரிவு 106(01) இன் கீழ் தடை விதிக்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு பத்திரங்கள் அந்தந்த பிரிவுகளை சேர்ந்த பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x