- வரிக்கு முன்னரான இலாபம் – ரூ. 7,331 மில்லியனாக 76%ஆல் அதிகரிப்பு
- வரிக்கு பின்னரான இலாபம் – ரூ. 4,558 மில்லியனாக 77%ஆல் அதிகரிப்பு
- திரவத்தன்மை காப்பு விகிதம் (LCR): அனைத்து நாணயங்களும் – 412.63% மற்றும் ரூபாய் – 472.95%
- மொத்த மூலதனப் போதுமான விகிதம் 15.35%
- மதிப்பிறக்க கட்டண விகிதம் 3.50%இல்
செலான் வங்கி ஜூன் 30, 2024இல் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கு (H1) ரூ. 4,558 மில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்துடன் (PAT) வலுவான செயற்திறனைப் பதிவுசெய்தது. இது 2023ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 2,575 மில்லியனிலிருந்து குறிப்பிடத்தக்க 77% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. சவாலான சந்தை நிலவரங்கள் இருந்தபோதிலும் வரிக்கு முன்னரான இலாபம் (PBT) முன்னைய ஆண்டை விட 76% அதிகரிப்பைக் காட்டி ரூ. 7,331 மில்லியனை எட்டியது.
வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ. 20,468 மில்லியனிலிருந்து ரூ. 18,590 மில்லியனாக 9.18%ஆல் குறைவடைந்ததுடன் நிகர வட்டி மிகை 5.76% இலிருந்து 5.17% ஆகக் குறைந்துள்ளது. நிகர கட்டண அடிப்படையிலான வருமானம் 6.29%ஆல் அதிகரித்தது. இது முதன்மையாக அட்டைகள் தொடர்பான வருமானம், பணம் அனுப்புதல் மற்றும் பிற கடன் சேவைகள் ஆகியவற்றினூடான வருமான அதிகரிப்பின் பிரதிபலிப்பு ஆகும். மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ. 23,279 மில்லியனாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 5.41% குறைவை காட்டுவதுடன் பெரும்பாலும் நிகர வட்டி மிகையின் குறைவே காரணம் ஆகும். விற்பனைக்கான தேறிய இலாபம் மற்றும் நிதிச் சொத்துக்களின் அங்கீகார நீக்கத்திலிருந்தான நிகர இலாபம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிற வருமானம் 52%ஆல் உயர்ந்துள்ளது.
வங்கியின் செயற்பாட்டுச் செலவுகள் ரூ. 9,128 மில்லியனிலிருந்து ரூ, 10,388 மில்லியனாக 13.80%ஆல் அதிகரித்துள்ளது. இது ஊழியர்களின் நன்மைகள் அதிகரித்ததன் விளைவாக ஆளணிச் செலவுகள் 18.69%ஆல் அதிகரித்தன் காரணமாகும். மேலதிகமாக, வங்கியானது ரூ. 2,956 மில்லியன் மதிப்பிறக்கக் கட்டணத்தைப் பதிவு செய்தது. மேம்பட்ட கடன் தரம் மற்றும் திறம்பட்ட மீட்பு முயற்சிகள் காரணமாக 1H 2023இல் தெரிவிக்கப்பட்ட ரூ. 9,559 மில்லியனிலிருந்து இது 69% குறைவடைந்துள்ளது.
வருமான வரிச் செலவுகள் 75.31%ஆல் அதிகரித்து ரூ. 2,773 மில்லியனை எட்டிய அதேவேளை நிதிச் சேவைகள் மீதான பெறுமதிசேர் வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி முன்னைய ஆண்டை விட முறையே 47.43% மற்றும் 47.07% ஆல் அதிகரித்துள்ளது.
ஜூன் 30, 2024 நிலவரப்படி, செலான் வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 725 பில்லியனாகவும், கடன்கள் மற்றும் முற்பணங்கள் நிகர மதிப்பிறக்கம் ரூ.434 பில்லியனாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வைப்புத்தொகை ரூ.603 பில்லியனாக இருந்தது. இதன் போது உள்ளூர் நாணய வைப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பும் உள்ளூர் நாணய மதிப்புயர்வு காரணமாக வெளிநாட்டு நாணய வைப்புகள் குறைவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொது உரிமையாண்மை படி 1 மற்றும் மொத்த படி 1 மூலதன விகிதங்கள் 12.40% மற்றும் மொத்த மூலதன விகிதம் 15.35% உடன் ஆரோக்கியமான மூலதனப் போதுமான நிலையை வங்கி பராமரித்தது. அனைத்து நாணயங்களுக்கான திரவத்தன்மை காப்பு விகிதம் (LCR) 412.63% ஆகவும் ரூபாவிற்கான LCR 472.95% ஆகவும் இருந்தது. இது சட்டப்பூர்வ தேவைகளை விட அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. மதிப்பிறக்க கட்டணங்களின் (நிலை 3) விகிதம் 3.50% ஆகவும் (நிலை 3) இற்கான வழங்கல் காப்பு விகிதம் 70% ஆகவும் இருந்தது. இது விவேகமான வழங்கல் நடைமுறைகள் காரணமாக தொழில்துறை சராசரியான 51% ஐ விட அதிகமாக இருந்தது.
2024இன் முதல் அரையாண்டின் போது வங்கி தனது ‘செலான் பகசர நூலகங்கள்’ முயற்சியை மேலும் 10 புதிய நூலகங்களைத் திறந்து, மொத்த நூலக எண்ணிக்கையை 235ஆக விரிவுபடுத்தியது. நாடு முழுவதுமான கல்விக்கு ஆதரவளிப்பதில் வங்கியின் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது.
உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 14.60%ஆக மேம்பட்டதுடன் பங்கொன்றின் வருவாய் ரூ.7.17ஆக அதிகரித்தது. வங்கியின் பங்கொன்றிற்கான நிகர சொத்து பெறுமதி ரூ. 101.37 ஆகும். மேலும், வலுவான முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் வங்கியின் வலுவான நிதி ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் வகையில் செலான் வங்கி ரூ. 10 பில்லியன் பேசல் III இணக்கமான படி 2 தொகுதிக்கடன் வெளியீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது.