மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸாக்கலை லக்கம் தோட்டப் பகுதியில் உள்ள வீட்டுத்தோட்டத்தில் கம்பியில் சிக்கி, தப்பிக்க முடியாமல் பல மணி நேரம் தவித்து வந்த சிறுத்தை உயிரிழந்துள்ளது.
குறித்த சிறுத்தை சிக்கியிருப்பதை அறிந்த அப்பகுதியினர் அது தொடர்பில் இன்று (01) காலை தோட்ட அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளனர். பின்னர் அதிகாரி மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் பொலிஸார் ஊடாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். தோட்ட மக்களும் அங்கு குவிந்தனர்.
மிருகங்களிடமிருந்து மரக்கறி தோட்ட, விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே இச்சிறுத்தை சிக்கியுள்ளது.
கம்பியில் சிக்கிய சிறுத்தை மரக்கறி தோட்டப்பகுதியில் இறுகி, தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல மணி நேர போராட்டத்தின் பின்னர் அச்சிறுத்தை உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த சிறுத்தையை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும், பின்னர் நீதவானின் உத்தரவின் பேரில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கம்பி வலையை போட்ட சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மஸ்கெலியா பொலிஸார், நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயினும் குறித்த இடத்திற்கு வனவிலங்கு அதிகாரிகள் வருகை தர தாமதமானதாலேயே இச்சிறுத்தை உயிரிழந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் சுழற்சி நிருபர்