அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், கொள்கைகளில் கொண்டுள்ள மாற்றுக் கருத்துகளைத் தற்காத்துப் பேசியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பின் முதன்முறை அவர் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். ஜனாதிபதி ஜோ பைடன் பற்றியும் வெள்ளை மாளிகையில் தமது அனுபவத்தையும் ஹாரிஸ் பகிர்ந்துகொண்டார்.
பைடன் நிர்வாகத்தால் கடந்த சில மாதங்களில் சட்ட விரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது, நோய்ப் பரவல் காலத்துக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீட்க முடிந்திருக்கிறது, வேலையின்மை வீதம் குறைந்திருக்கிறது என்று ஹாரிஸ் சுட்டிக்காட்டினார்.
வெள்ளை மாளிகையின் கொள்கைகள் வெற்றியைக் கொடுத்திருப்பதாக அவர் கூறினார்.
துணை ஜனாதிபதி வேட்பாளர் டிம் வால்ஸுடன் ஹாரிஸ் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட நேர்காணலில் கலந்துகொண்டார். சுமார் 27 நிமிடம் நீடித்த நேர்காணலில் சுவையாக ஏதும் இல்லை என்று குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.