ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது மற்றும் முகத்தையும் உடலையும் காட்டக்கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.
“ஒழுக்கத்தை ஊக்குவிப்பதையும், தீயொழுக்கத்தை தடுப்பதையும்” நோக்கமாக கொண்டது என தாலிபன்கள் கூறும் புதிய சட்டங்கள் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் வீடுகளுக்கு வெளியே முகங்களை காட்டுவதையும், பொதுவெளியில் சத்தமாக பேசுவதையும் இந்த சட்டங்கள் தடை செய்கின்றன.
இந்த புதிய சட்டங்களுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, இது குறித்து தங்களின் கவலையையும் தெரிவித்துள்ளது.
இந்த சட்டங்கள் ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை இருண்டதாக மாற்றியுள்ளது என்று ஐ.நாவின் மூத்த அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
தாலிபனின் அதிவுயர் தலைவர் ஹைபதுல்லா அகுந்ஸாடா இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
இந்த சட்டத்தில் இருந்து இந்த நாட்டில் யாருக்கும் விலக்கு அளிக்கப்படாது என்று ஆப்கானிஸ்தானின் ஒழுக்கநெறி அமைச்சகம் கூறியுள்ளது.
ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும்? பொதுவெளியில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும்? அவர்கள் எதை உண்ண வேண்டும்? என்பது தொடர்பான ஆப்கானிஸ்தான் மக்களின் பொதுவாழ்வில், ஒழுக்கநெறி காவலர்கள் (மொஹ்டாசபீன்) தலையிட இந்த சட்டங்கள் வழிவகை செய்கின்றன.
இந்த சட்டம், பொதுவெளியில் பெண்கள் பேசுவதும் ஒழுக்கக்கேடான செயலாக அறிவித்துள்ளது.
“தேவை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒரு பெண் தன்னுடைய முகம், உடல், மற்றும் குரல் ஆகியவற்றை மறைக்க கடமைப்பட்டுள்ளனர்,” என்று இந்த சட்டம் தெரிவிக்கிறது.
ஷரியா சட்டங்களின்படி (இஸ்லாமிய மத சட்டங்கள்) ஏற்கனவே இது போன்ற விதிகளை இந்த அமைச்சகம் விதித்து வருகிறது. மேலும், இந்த நடைமுறையை பின்பற்றாத ஆயிரக்கணக்கான நபர்களை பிடித்து வைத்துள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய சட்டங்கள் ஷரியா விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் அதனை ஒழுக்கநெறி அமைச்சகம் நடைமுறைப்படுத்த உள்ளது என்றும் தாலிபன்கள் கூறியுள்ளனர். தலிபான்கள் அதிவுயர் தலைவர் ஏற்கனவே இதற்கு 2022ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், தற்போது அதிகாரப்பூர்வமாக இது நடைமுறைக்கு வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உரிமைக் குழுக்களும் சமீபத்திய விதிகளை கடுமையாக விமர்சித்துள்ளது.
புதிய தலிபான் விதிகள் ஆப்கானிஸ்தானில் பெண்களை மேலும் ஒடுக்குகிறது.
பொது வாழ்க்கை மற்றும் அடிப்படை சுதந்திரங்களில் இருந்து அவர்களை தடை செய்கிறது.
மேற்கத்திய அரசாங்கங்களால் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை.