மத நிந்தனை சட்டம், குறிப்பாக பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 295-C பிரிவு, அந்நாட்டு சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை கடுமையாக பாதித்து வருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன.
இச்சட்டம் பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை அவமதிப்பதாகக் கருதப்படும் செயல்களுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகுக்கிறது. இருப்பினும், இச்சட்டத்தை பாகிஸ்தானிய அரசு அந்நாட்டிலுள்ள சிறுபான்மையின சமூகங்களை இலக்கு வைத்து தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானின் மத நிந்தனை சட்டங்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட பிரிடிஷ் இந்திய தண்டனைச் சட்டத்தில் (1860) இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் பிரிவினைக்குப் பின்னரும் இந்த சட்டம் அங்கு அமுலில் இருந்து வருகிறது. 1980களில் இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சி பீடமேறிய ஜெனரல் ஸியாஉல் ஹக்கின் காலத்தின் போது, இந்த சட்டங்கள் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டு கடுமையாக்கப்பட்டன. மத நிந்தனை சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் பலவற்றை ஸியாஉல் ஹக் கொண்டு வந்தார்.
இந்த சட்டத்தின் படி முஸ்லிம்களின் புனித நூலான அல்குரானை அவமதிப்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது. இந்த சட்டம் அகமதியா முஸ்லிம்கள் தங்களை முஸ்லிம்களாக அடையாளப்படுத்துவததை தடை செய்ததோடு,. முகம்மது நபியவா்களை அவமதிப்பதை மரண தண்டனைக்குரிய குற்றமாக மாற்றியது.
1947 முதல் 2021 வரை குறைந்தபட்சம் 89 பாகிஸ்தானியர்கள் மதநிந்தனை குற்றச்சாட்டுகளின் பேரில் சட்டத்திற்கு புறம்பான முறையில் கலகக்காரர்களினால் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய கொலைகளின் பாதிக்கப்பட்டவர்களில் பஞ்சாப் ஆளுநர் சல்மான் தசீர், சிறுபான்மையினர்களுக்கான அமைச்சராக இருந்த ஷாபாஸ் பட்டி, மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆரிஃப் இக்பால் பட்டி போன்ற உயர் அந்தஸ்தில் இருந்த பாகிஸ்தானியர்களும் அடங்குவர்.
பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின் (HRCP) படி, 1987 முதல் 2021 வரை குறைந்தது 1,855 பேர் மத நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்டுள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள், 633 பேர் முஸ்லிம்கள், 765 பேர் அகமதியா அமைப்பை சார்ந்தவா்கள் மற்றும் 31 பேர் இந்துக்கள் என அறிய வருகிறது.
சென்டர் போஃர் சோஷல் ஜஸ்டிஸ் (CSJ) என்ற அமைப்பின் அறிக்கையின்படி, 1987 முதல் 2020 வரை பாகிஸ்தானில் மதநிந்தனை சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில், 75% க்கும் மேற்பட்டவை தனிப்பட்ட பகைமை அல்லது சொத்து தகராறுகளால் காரணமாக பொய்யாக சோடிக்கப்பட்ட வழக்குகள் என்று கண்டறியப்பட்டது.
சிறுபான்மையினர் மீதான தாக்கம்:
அமெரிக்க மத சுதந்திர ஆணையத்தின் (USCIRF) 2020 அறிக்கையின்படி, பாகிஸ்தான் மக்கள்தொகையில் 3.6% மட்டுமே சிறுபான்மையினராக இருந்தபோதிலும், மத நிந்தனை வழக்குகளில் 50% க்கும் மேற்பட்டவை சிறுபான்மையினரே இலக்காகியுள்னா்.
ஆசியா பீபி என்ற கிறிஸ்தவ இளம் பெண்ணின் மீது சுமத்தப்பட்ட வழக்கு உலகளவில் மிகவும் பேசப்பட்ட வழக்காகும். மத நிந்தனை சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் படும் இன்னல்களை இந்த வழக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. மத நிந்தனை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி அந்நாட்டு சிறுபான்மை மக்களை சிறையில் அடைக்கும் அநியாயத்தை ஆசியா பீபியின் சம்பவம் ஒரு பேசு பொருளாக்கியது. ஆசியா பீபி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் கிறிஸ்தவ பெண் மத நிந்தனை சட்டத்தில் கைது செய்யப்பட்டு 2010 முதல் 2018 வரை மரண தண்டனை கைதியாக சிறையில் இருந்தார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிப்புகள்:
பாகிஸ்தானின் மனித உரிமை ஆணைக்குழுவின் (HRCP) தகவல்களின் படி, மத நிந்தனை குற்றச்சாட்டுகள் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை கணிசமாக பாதித்திருப்பதாக அறிவித்துள்ளது. பல சிறுபான்மையின மாணவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பாடசாலைகளுக்குச் செல்வதை இடை நடுவில் நிறுத்தியுள்ளதாக மேற்படி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் காணக் கூடியதாக இருக்கிறது.
இத்தகைய தரவுகள் பாகிஸ்தானில் அமுலில் உள்ள மத நிந்தனை சட்டம் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை கடுமையாக பாதித்திருப்பதை தெளிவாக காட்டுகின்றன. இச்சட்டம் அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்பட்டு, சிறுபான்மையினரை அச்சுறுத்தவும், துன்புறுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இது அவர்களின் வாழ்க்கை, சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் சமத்துவ உரிமைகளை மீறுவதோடு, சமூகத்தில் அவர்களின் முழுமையான பங்கேற்பையும் தடுக்கிறது.
.பாகிஸ்தானில் வளர்ந்து வரும் மதவாதமும், மத நிந்தனை சட்டமும் சிறுபான்மை சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இவை சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை மீறுவதோடு, நாட்டின் சமூக ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கின்றன. இந்த சூழ்நிலையை மாற்ற, சட்ட சீர்திருத்தங்கள், மத சகிப்புத்தன்மையை ஊக்குவித்தல், மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
இந்த சட்டங்கள் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கும், தனிப்பட்ட பகைகளுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் விமர்சிக்கப்படுகின்றன. இன்றும் பாகிஸ்தானில் அமுலில் உள்ள இந்த சட்டங்களின் தாக்கம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெறுகின்றன.
சர்வதேசத்தின் எதிர்வினை:
மனித உரிமை அமைப்புகள் இந்த சட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் இந்த சட்டங்களை திரும்பப் பெற பாகிஸ்தானை வலியுறுத்தி வருகின்றன.
சர்வதேசத்தின் அழுத்தங்கள் காரணமாக ஆசியா பீபி மரண தண்டனையிலிருந்து பின்னா் விடுவிக்கப்பட்டார் .
2011ம் ஆண்டு பஞ்சாப் மாகாண ஆளுநரான சல்மான் தசீர், மத நிந்தனை சட்டங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என கருத்தை வெளியிட்டதற்காக, அவரின் மெய்பாதுகாவலராலேயே படுகொலை செய்யப்பட்டார்.
மரண தண்டனைக் கைதியாக சிறையில் இருந்த ஆசியா பீபியை சல்மான் தசீா் சிறைக்குச் சென்று சந்தித்து விட்டு, மத நிந்தனை சட்டங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என கருத்து வெளியிட்டார். இந்த கருத்தை ஜீரணிக்க முடியாத அவரின் மெய்பாதுகாவலர் அவரை நடுவீதியில் வைத்து படுகொலை செய்தார்.
பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்திற்கு மட்டுமல்ல பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்களுக்கும், இந்த மதவாதம் அச்சுறுத்தலாக மாறியிருப்பதை சல்மான் தசீரின் படுகொலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
சீர்திருத்த முயற்சிகள்:
பல்வேறு சிவில் சமூக குழுக்கள் இந்த மத நிந்தனை சட்டங்களை திரும்பப் பெற அல்லது திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி வருகின்றன.
பாகிஸ்தானின் சில அரசியல் கட்சிகள் இந்த சட்டங்களில் மாற்றம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்ட போதும், இதுவரை வெற்றியின் இலக்கை அடைவதற்கு அந்நாட்டிலுள்ள தீவிர மதவாதம் தடையாக இருந்து வருகிறது.
பாகிஸ்தானில் மதவாதமும், மதநிந்தனை சட்டமும் இருமுனையும் வெட்டக் கூடிய கத்திகள் போல இயங்கி வருகின்றன. இவை அந்த சமூகத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
GSP+ வரி விலக்கும் மனித உரிமையும்
பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய யூனியன் வழங்கும் GSP+ (Generalised Scheme of Preferences Plus) சலுகை நிறுத்தப்பட்டதற்கு அங்கு வளா்ந்து வரும் மதவாதமும், மத நிந்தனை சட்டங்களுக்கும் காரணங்களாக உள்ளதாக விமர்சனம் தெரிவிக்கப்படுகிறது.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை என்பது ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகை திட்டமாகும். பாகிஸ்தான் 2014ம் ஆண்டு முதல் இந்த சலுகையைப் பெற்று வந்தது. GSP+ சலுகையைப் பெற, சர்வதேச மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை ஒப்பந்தங்களை குறித்த நாடுகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது.
இதில் மத சுதந்திரமும், சிறுபான்மையினர் பாதுகாப்பும் முக்கிய நிபந்தனைகளாகும். ஆனால், பாகிஸ்தானில் இவை இரண்டும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றன. பாகிஸ்தானின் மத நிந்தனை சட்டங்கள் சர்வதேச மனித உரிமை தரநிலைகளுக்கு எதிரானவை என ஐரோப்பிய யூனியன் கருதுகிறது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஐரோப்பிய நாடாளுமன்றம் பாகிஸ்தானின் GSP+ அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தது. மனித உரிமை மீறல்கள், குறிப்பாக மத நிந்தனை சட்டங்களின் தவறான பயன்பாடு இதற்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டன.
என்ற போதிலும், பாகிஸ்தானுக்கான GSP+ அந்தஸ்து 2023 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இந்த சலுகையை தொடர, பாகிஸ்தான் மனித உரிமைகள், குறிப்பாக மத சுதந்திரம் தொடர்பான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி வருகிறது.
எனவே, மத நிந்தனை சட்டங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் பாகிஸ்தானின் GSP+ அந்தஸ்தை பாதித்துள்ளன என்பது தெளிவாகிறது. இந்த சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது GSP+ சலுகையை தக்க வைத்துக் கொள்ள உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் வளரும் மதவாதமும் குறித்த மத நிந்தனை சட்டமும் சிறுபான்மை சமூகங்களுக்கு மட்டுமல்லாமல் அந்நாட்டின் ஜனநாயகத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இவை சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை மீறுவதோடு, நாட்டின் சமூக ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கின்றன. இந்த சூழ்நிலையை மாற்ற, சட்ட சீர்திருத்தங்கள், மத சகிப்புத்தன்மையை ஊக்குவித்தல், மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.
– ஆதம்