Tuesday, October 8, 2024
Home » கல்விப் பயணத்தில் வெற்றியை ஈட்டுவதில் மாணவருக்கு கைகொடுக்கும் நட்புவட்டம்

கல்விப் பயணத்தில் வெற்றியை ஈட்டுவதில் மாணவருக்கு கைகொடுக்கும் நட்புவட்டம்

by sachintha
August 29, 2024 4:14 pm 0 comment

ஒவ்வொரு மனிதனதும் வாழ்க்கைப் பயணத்திலும் சமவயதுக்குழுக்கள் என்னும் தரப்பினரின் பங்களிப்பு இன்றியமையாததாகும். பாடசாலை முதல் பல்கலைக்கழகம் ஏன் வாழ்நாள் முழுவதும் ஒரு தொடர்கதையைப் போல நம்முடன் தொடர்ந்து கொண்டிருக்கும் இவர்களே நம் ஒவ்வொருவரினதும் வாழ்க்கைக்கான தொடக்கப்புள்ளியாகவும், முற்றுப் புள்ளியாகவும் அமைகின்றனர்.

எந்தவித எதிர்பார்ப்புக்களோ, முன் அனுபவங்களோ இன்றி தற்செயலாக நடைபெறுகின்ற செயற்பாடாகவே இச்சமவயதுக்குழுக்களின் உள்நுழைவானது ஒவ்வொருவரினது வாழ்விலும் அமைகின்றது என்பதனைவிட ஒவ்வொரு மாணவரினதும் வாழ்வில் ஏற்படுகின்றது என்றே கூறலாம். ஏனெனில் சமவயதுக்குழுக்களின் தோற்றத்திற்கு பாடசாலையே அடித்தளமிடுகின்றது.

இன்று பெற்றோர்களிடம் கற்றுக்கொள்ளாத பல்வேறு விடயங்களிளை சமவயதுக்குழுக்களிடம் இருந்தே நாம் கற்றுக்கொள்கின்றோம். குழுச்செயற்பாடுகளில் எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் இணைந்து செயற்படல், அவர்களுடைய இன்பதுன்பங்களில் பங்கேற்று அவர்களுக்கு உறுதுணையாய் நிற்றல், சகபாடிகளின் திறன்களைக் கண்டறிந்து அவற்றினை ஊக்குவித்தல், படிக்கின்றபோதே நண்பர்களுடன் இணைந்து சுயதொழில்களை மேற்கொண்டு தங்கள் கற்றலுக்கான பணத்தினை சம்பாதித்துக் கொள்ளல் போன்ற சிறந்த விடயங்களிலும் கூட இவர்களின் பங்களிப்பானது மேலோங்கிக் காணப்படுகின்றது.

மேலும் பாடரீதியான சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்து அதுதொடர்பான விளக்கங்களைப் பெற்றுக்கொள்வதனைக் காட்டிலும் சமவயதுக் குழுக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதிலேயே அதீத ஈடுபாட்டினைக் காட்டுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

நண்பர்கள் எனும்போது அங்கு வயதோ, இனமோ, மதமோ தாக்கம் செலுத்துவதில்லை. நாம் நமக்குப் பிடித்த சமவயதுக்குழுக்களுடன் நட்பெனும் உறவை ஏற்படுத்திக்கொள்கிறோம். நாம் நம் சகபாடிகள் எம்மதத்தவராகக் காணப்பட்டாலும் அவர்களுடைய அனைத்துவிதமான விழாக்களுக்கும் செல்வதுடன், அவர்களுடைய இன்ப துன்பங்களிலும் கலந்து கொள்கின்றார்கள், தனது நண்பர்களின் வீட்டிலே ஏதேனும் விசேட நிகழ்வென்றாலும் சரி, துக்க நிகழ்வென்றாலும் சரி நாம் அழைக்காமலே எதுவித எதிர்பார்ப்புக்களுமேயின்றி தன்னுடைய உறவாகவே எம்மை நினைத்து ஓடி வந்து உதவிசெய்து நமக்கு உறுதுணையாய் நிற்பதும் இவர்களே. இதனால் சமூக ஒற்றுமை மேலோங்குகிறது, ஓர் இனம் ஒரே தேசம் என்ற எண்ணக்கரு மேலெழுகின்றது.

நாம் பாடசாலையில் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலே ஈடுபடுகின்ற வேளைகளிலே நம்மை உற்சாகப்படுத்துவதிலும், நாம் தோல்வியை சந்திக்கின்ற வேளைகளில் நாம் துவண்டு போகாமல் நம்மை முன்னேற்றுவதிலும் இவர்களினுடைய பங்கு அளப்பரியதே.

ஏன் இன்று பல மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் பெற்றோர்கள், ஆசிரியர்களைக் காட்டிலும் சமவயதுக்துழுக்களே பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் ஒருபோதும் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதில்லை. நம்மால் முடியாது என்று நம் மனதிலே பசுமரத்தாணி போல் புதைந்து காணப்படுகின்ற எதிர்மறையான சிந்தனையை முடியும் என்ற நேர்மறை மனவெழுச்சியாக மாற்றியமைக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள்கூட தங்களால் எதுவுமே இயலாது என்று அவர்களைச் சுற்றியுள்ளவர்களால் ஒதுக்கப்பட்ட நிலைப்பாட்டிலிருந்து மாற்றமடைந்து இன்று தங்களாலும் முடியும் என்பதனை பல்வேறு துறைகளினூடாகவும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் இவர்களைப் பெற்றெடுத்த எத்தனையோ பெற்றோர்களின் ஆறாத வடுக்கள் ஆற்றப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் காரணம் அத்தகைய பிள்ளைகளை சக நண்பனானக் கருதி அவர்களை ஊக்குவிக்கின்ற அவர்களது சகபாடிகளே. பாடசாலை, பல்கலைக்கழகங்களிலும் கூட பிரியாவிடை நிகழ்வுகள் நடாத்தப்படுத்போதுகூட நம் அனைவரினது கண்களும் கலங்கிவிடும். நாம் அவர்களுடன் பயணித்த, கடந்து வந்த நாட்கள் அனைத்தும் நம் கண்முன்னே வந்துசேரும். மீண்டும் நாம் கடந்த அந்த நாடகள் மீண்டும் ஒருமுறை கிடைத்துவிடாதா என்று இன்று பலரும் ஏங்கிக் கொண்டிருப்பதும் நட்பின் மகத்துவத்தினையே உணர்த்துகின்றது.

எனவே இன்றைய கல்விச் சமூகமயமாக்கலில் சமவயதுக் குழுக்களினுடைய பங்களிப்பானது நாம் தெரிவுசெய்கின்ற நபர்களைப் பொறுத்தே அவர்கள் நம் வாழ்க்கைக்கான முன்னேற்றப்பாதைக்கு ஒளியேற்றி வைப்பவர்களா? அல்லது இருளிலே மூழ்கடிப்பவர்களா? என்பது தீர்மானிக்கப்படுகின்றது. இதனையே வள்ளுவப் பெருந்தகை,

‘நிலத்தியல்பான் நீர்திரிந்

தற்றாகும் மாந்தர்க்

கினத்தியல்ப தாகும் அறிவு’

என்ற குறளினூடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சுரேஷ் ஷஞ்சய் ராஜ்…

இரண்டாம் வருட கல்வியல் சிறப்புக் கற்கை மாணவன்

கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x