அறியாமை என்ற அகக்களையை வேர் அறுத்து அறிவு என்னும் ஒளிச்சுடரை அறுவடை செய்வதே கல்வியாகும். அவ்வகையிலே கல்வியானது ஒவ்வொரு மனித வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. இதனை உணர்ந்த சான்றோர் அக்காலத்திலே ‘மூத்தோர் சொல்லும் முதுநெல்லிகனியும் முன்பே கசக்கும் பின்பே இனிக்கும்’ என்றும் ஒளவையார் ‘பிச்சைபுகினும் கற்கை நன்றே’ என்றும் கல்வியின் மகத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.
ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை ஒவ்வொரு மனித வாழ்வினையும் மாற்றி அமைக்கக்கூடிய ஆயுதமாக கல்வி விளங்குகின்றது. இவ்வாறு அத்தியாவசியமாக விளங்கும் கற்றல் செயற்பாட்டின் விடிவெள்ளியாக விளங்குபவர்கள் ஆசிரியர்களே. இதனாலையே எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என ஆசிரியர்கள் தெய்வங்களாக போற்றப்படுகின்றனர்.
உலகை மாற்றக்கூடிய உன்னதமான கல்வியில் ஆசிரியரின் பங்கு அளப்பரியது என்றே கூற முடியும். இன்றைய கற்றல் செயற்பாட்டின் நட்சத்திரங்கள் மாணவர்களே. மாணவர்களை மையமாகக் கொண்டே இன்று கற்றல் கற்பித்தல் நுட்பமுறைகள் காணப்படுகின்றன. இங்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டியாக மாத்திரமே திகழ்கின்றனர். அன்று ஆசிரியர்களின் செயற்பாடுகளே கற்றல் கற்பித்தலில் தாக்கம் செலுத்தின. இன்று மாணவர்களின் வகிபங்கே அதிகமாக காணப்படுகின்றன.
அவ்வகையிலே ஆசிரியர் கோட்பாடு ரீதியாக விடியங்களை அனுபவங்களின் மூலம் தேர்ச்சியாகவோ அல்லது அறிக்கையாகவோ மாற்றமுறச் செய்யும் ஒரு மாற்றுமுகவராக செயல்படுவார். இங்கு செயலர் நிலையில் ஆசிரியர் செயல்பாடுகள் அமையப்பட மாட்டாது. மாறாக மாணவர்களை செயலறு நிலையில் அனுபவங்களை பெறுவதற்கான செயல்பாடுகளை அதிகம் இடம்பெறும். கற்பித்தலை விட கற்றல் செயல்பாடுகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டு மாணவர்களை சுயமாக அனுபவங்களை பெறுவதற்காக சந்தர்ப்பங்கள் ஆசிரியரினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.
கற்றல் கற்பித்தல் முறையில் மாணவர்கள் நேரடியான கற்றல் அனுபவத்தினை பெற்றுக் கொள்ளும் முறையாக போல செய்தல் கற்றல் நுட்பமுறை விளங்குகின்றது. இங்கு முன் வைக்க எதிர்பார்க்கும் அறிவுத்தொகுதியானது வினைத்திறனாக அமையும். எனலாம். இத்தகைய நுட்ப முறைகள் இன்றைய மாணவரிடத்தில் ஊடுபுகும் பட்சத்தில் அனுபவங்களின் அடிப்படையில் கற்பதற்க்கு வாய்ப்புகள் ஏற்படுகின்றது. அதுமட்டுமன்றி கோட்பாட்டு அறிவாகவும், கோட்பாட்டு அறிவு செயல் அறிவாகவும் நிலைமாற்றம் செய்பவராக இன்றைய ஆசிரியர்கள் தொழிற்படுகின்றார்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாணவர்கள் இடத்தில் அறிவும் திறனும் மனப்பாங்கும் வளர்க்கப்படுகின்றன
மாணவர்களின் சிந்தனைகள் தூண்டப்படவே தொழில்நுட்பங்கள் வருகை கண்டன எனலாம். ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு கணினி மூலை, செயற்பாட்டு மூலை, வாசிப்பு மூலை, உணவு மூலை என்பவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு ஆங்கிலம் கற்பித்தல்,இரு நகரின் நண்பர்கள், பாடசாலை சினேகம் என நிகழ்ச்சித் திட்டங்கள் உள்ளன. ஆசிரியர் மாணவரை ஒன்றிணைத்து சிறந்த கற்பித்தலுக்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களின் வருகை, கற்பிக்கும் சாதன பொருட்களை பயன்படுத்தி கற்பித்தல் எனும் ஒன்பது நிகழ்வுகளைக் கொண்ட ரோபட் கானோயின் கற்பித்தல் முறை போன்ற நவீன கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் பயன்படுத்துகின்றனர்கள் என்றால் அது இன்றைய மாணவர்களின் கற்றலில் ஏற்பட்ட சுதந்திர நிலையே.
மேலும் ஊடாடும் பாடங்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், கல்வியில் AI தொழிநுட்பம் பயன்படுத்துதல், கலப்புகற்றல், 3D அச்சிடுதல், வடிவமைப்பு- சிந்தனை செயல்முறையைப் பயன்படுத்தவும், புரட்டப்பட்ட வகுப்பறை மற்றும் அதீத தொழிநுட்பங்களை ஒருங்கிணைத்து கற்றலை மேம்படுத்துவதற்கென மாணவர்களின் கற்றலை இலகுபடுத்தும் வகையில் விபரங்கள் கல்வி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டு கற்றல் ஊக்குவிக்கப்படுகின்றது.
இதிலிருந்து நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அன்று ஆசிரியர்கள் மாணவர்களது சிந்தனை விரிவுபடுத்தும் கற்றல் நுட்பமுறைகளை பயன்படுத்தாமையினால் தான் மாணவர்களது போக்கு மந்தமாகக் காணப்பட்டது. இதுவே இன்றைய நிலையில் மாணவர்களது மூளை தூசு துடைக்கப்பட்டு இற்றைய கற்றல் நுட்பங்களின் ஈடுபாட்டினால் பல பக்கங்களிலும் சிதறி ஊடுபுகுவதனால் உள்ளங்கையில் உலகம் என்றநிலைக்கு மாறிவிட்டது எனலாம்.
மனோகரன் மதுஷாயினி…
இரண்டாம் வருடம் கல்வியியல் சிறப்பு கற்கை,
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை கிழக்கு பல்கலைக்கழகம்