புத்தளம் அல் குர்ஆனிய கல்வி நிலையத்தில் இரண்டு வருட பாட நெறியை நிறைவு செய்த நான்காவது தொகுதி மாணவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் அண்மையில் புத்தளம் இபுனு பதூதா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, கடந்த ரமழானில் இடம்பெற்ற “வசந்தம் வளம் பெற” போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் சமகாலத்தில் இடம்பெற்றது.
புத்தளம் அல் குர்ஆனிக் கல்வி நிலையத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ரஷீத் பவாஸ் அஹ்மத் (அஷ்ஹரி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எக்ஸலன்ஸ் பாடசாலை அதிபர் ஹிதாயதுல்லா அஜ்மலும் விஷேட அதிதியாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச்சங்க தலைவரும், முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினருமான ரனீஸ் பதூர்தீன், புத்தளம் ஹுசைன் மஸ்ஜித் நிர்வாக தலைவர் அஷ்ஷெய்க் ஷாபி ஷஹ்தி உள்ளிட்ட ஏனைய அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் அதிதிகளால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. மாணவர்களது அறிவு, ஆன்மீகம், ஆளுமை விருத்தியை மேம்படுத்துவதோடு அல்குர்ஆனுடன் நல்லுறவை பேணக்கூடிய பண்பொழுக்கமுள்ள ஓர் இளைய தலை முறையை உருவாக்குதல் எனும் இலக்கோடு கடந்த ஆறு வருடங்களாக அல் குர்ஆனிய கல்வி நிலையம்செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(புத்தளம் தினகரன் நிருபர்)