Monday, November 4, 2024
Home » IMF: மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது வெற்றியளிக்காது

IMF: மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது வெற்றியளிக்காது

-பேசினால், டிசம்பர்- - ஜனவரி வரை 1.2 - 1.3 பில்.டொலர்களை இழக்க நேரிடும்

by sachintha
August 29, 2024 7:11 am 0 comment

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல்மட்டுமன்றி அது வெற்றிகரமான செயலாக அமையாதென, வெளிநாட்டலுவல்கள், நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால், எதிர்வரும் டிசம்பரில் சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள அடுத்த தவணை மற்றும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) வழங்கவுள்ள தவணைகளை இழக்க நேரிடுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி 2024 டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரை 1.2 பில்லியன் முதல் 1.3 பில்லியன் டொலர்களை இந்நாடு இழக்குமெனவும்,இதனால், மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்கு மாறுவதை யாராலும் தடுக்க முடியாதெனவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் சுட்டிக்காட்டினார்.

நேற்று (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர், இதனைக் குறிப்பிட்டார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி :

“2022 இல் நாடு இருந்த நிலைமையின் படி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஒரு பாரிய பங்களிப்பை வழங்க வேண்டியிருந்தது. பாதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு உறவுகளை மீளக் கட்டியெழுப்புதல், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்று அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தல் போன்ற சவால்களை நாம் அதன்போது எதிர்கொண்டோம்.

இரண்டரை வருடங்களின் பின்னர் இந்த நாட்டை ஸ்திரப்படுத்த எம்மால் முடிந்துள்ளது. அந்த பயன்களை அடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார்.

சர்வதேச உறவுகள் மூலம் நாட்டின் கடனை மறுசீரமைக்க 17 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கையை எட்ட முடிந்திருப்பது நாம் பெற்ற பாரிய வெற்றி என்றே கூற வேண்டும்.

இன்று நாம் எமது வெளிநாட்டுக் கொள்கை, தேசிய தனித்துவம் மற்றும் இறையாண்மை ஆகியவற்றை எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காமல் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்துள்ளோம். இன்று, பொருளாதார நெருக்கடியில் இருந்து மிக விரைவாக மீண்டு வருவதற்கு, உலகிற்கே எடுத்துக்காட்டாக நாம் மாறியுள்ளோம். தற்போது, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக எங்களிடம் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றன.

இந்த நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய தலைமைத்துவம் சர்வதேச ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x