Saturday, December 14, 2024
Home » அமானா வங்கி பணிப்பாளர் சபையில் அஸ்ரின் சஹீர்

அமானா வங்கி பணிப்பாளர் சபையில் அஸ்ரின் சஹீர்

by Rizwan Segu Mohideen
August 28, 2024 11:46 am 0 comment

அமானா வங்கி தனது நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளராக அஸ்ரின் சஹீர் அவர்களை 2024 ஜுலை 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. அஸ்ரின், நிதித்துறையில் 30 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டவராக திகழ்கின்றார்.

தமது தொழில் வாழ்க்கையை KPMG கொழும்பில் ஆரம்பித்து பின்னர் ஏர்னஸ்ட் அன்ட் யங் பஹ்ரெய்னுக்கு மாறியிருந்தார். பின்னர் குவைட் பினான்ஸ் ஹவுசில் முதலீட்டு முகாமையாளராக இணைந்தார். குவைட் பினான்ஸ் ஹவுசில், சர்வதேச வங்கியியல் பிரிவினுள் வங்கியியல் வினைத்திறன் கண்காணிப்பு அலகு மற்றும் கடன் கண்காணிப்பு அலகு ஆகியவற்றின் தலைமை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றதுடன், துணை வங்கிகளின் வினைத்திறனை மேற்பார்வை செய்திருந்தார். உறுதியான நிதிசார் அனுபவத்தின் காரணமாக, குவைட் பினான்ஸ் ஹவுஸ் மலேசியா பேர்ஹாட்டின் நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளராக நியமிக்கப்பட்டு 2011 முதல் 2017 வரையான காலப்பகுதியிலும், 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப்பகுதியிலும் கடமையாற்றியிருந்தார். தமது முதல் தவணையில், பணிப்பாளர் சபை மாற்றியமையப்பு செயற்குழுவின் தவிசாளராக செயலாற்றியதுடன், இதன் போது, வங்கியின் இலாகாவை மீளமைப்பது மற்றும் புதிய கடன் வழங்கல் வழிகாட்டலை நிறுவுவது தொடர்பில் சர்வதேச ஆலோசகர்களுடன் இணைந்து செயலாற்றியிருந்தார். தற்போது இவர் பணிப்பாளர் சபை கணக்காய்வு குழு மற்றும் பணிப்பாளர் சபை பிரேரிப்பு மற்றும் சம்பள சபை ஆகியவற்றின் தவிசாளராக சேவையாற்றுகின்றார்.

கணக்கீடு, வரி மற்றும் வியாபாரத்துடன் தொடர்புடைய விடயங்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமான Frontier Advisory Ltd.இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஸ்ரின் செயலாற்றுகின்றார்.

இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தின் (CA Sri Lanka) அங்கத்தவராக அஸ்ரின் திகழ்வதுடன், இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் (ICMA) அங்கத்தவராகவும், பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் (CIMA-UK) இணை அங்கத்தவர் மற்றும் சான்றளிக்கப்பட்ட இடர் பகுப்பாளராகவும் (CRA) திகழ்கின்றார்.

இந்த நியமனம் தொடர்பில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “எமது பணிப்பாளர் சபைக்கு அஸ்ரின் சஹீர் அவர்களை வரவேற்பதில் நாம் பெருமை கொள்கின்றோம். புகழ்பெற்ற சர்வதேச நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ளதுடன், வட்டிசாராத வங்கியியல் முறைமையில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். எமது அணிக்கு பெருமளவு அறிவையும் நிதிசார் நிபுணத்துவத்தையும் கொண்டு வருகின்றார். அவரின் பெறுமதி வாய்ந்த உள்ளார்ந்த அம்சங்கள் மற்றும் ஆலோசனைகளை நாம் எதிர்பார்ப்பதுடன், எமது பணிப்பாளர் சபைக்கு சிறந்த பெறுமதி சேர்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.” என்றார்.

இந்த நியமனத்துடன், அமானா வங்கியின் பணிப்பாளர் சபையில் அடங்கியிருப்போர்: அஸ்கி அக்பராலி (தவிசாளர்), மொஹமட் அஸ்மீர் (முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி), திஷான் சுபசிங்க (நிறைவேற்று அதிகாரமற்ற சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளர்), மொஹமட் அதாவுர் ரஹ்மான் சௌத்ரி (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), தில்ஷான் ஹெட்டியாரச்சி (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), செயித் முஹம்மத் அசிம் ராஸா (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), மொஹம்மட் ஹஸன் (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), மொஹமட் ஆடமலி (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), கைருல் முஸமெல் பெரேரா பின் அப்துல்லாஹ் (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர்), டெல்வின் பெரேரா (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர்) மற்றும் அஸ்ரின் சஹீர் (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர்).

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT