Home » உழைக்கும்போது செலுத்தும் வரியை திருத்த அரசிற்கும் IMF இற்கும் இடையில் உடன்பாடு

உழைக்கும்போது செலுத்தும் வரியை திருத்த அரசிற்கும் IMF இற்கும் இடையில் உடன்பாடு

- மீண்டும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், வாழ்வதற்கு நாடொன்று எஞ்சாது

by Rizwan Segu Mohideen
August 28, 2024 7:26 pm 0 comment

• மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசாங்கம் உறுதி
• வருமானத்தை குறைத்து, செலவுகளை அதிகரித்து பொருளாதாரத்தை எவ்வாறு நடத்துவது என்பதை சஜித் அநுர – நாட்டுக்குக் கூற வேண்டும்
• சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் காண்பிக்கும் பாதை எரிவாயு, எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவு அற்ற யுகத்துக்கான பாதை
• 2022 இல் இருந்த நிலைக்குச் செல்வதா? அரசாங்கத்துடன் இணைந்து தொடர்ந்து முன்னேறுவதா என மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
– எஹலியகொட மக்கள் பேரணியில் ஜனாதிபதி

மக்களுக்கு பாரிய பிரச்சினையாக உள்ள உழைக்கும் போது செலுத்தும் வரியை மீளாய்வு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடி மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எஹலியகொட புதிய சந்தைக்கு அருகில் இன்று (28) பிற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது.. நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் நாம் அனைவரும் வாழ்வதற்கு ஒரு நாடு எஞ்சியிருக்காது எனவும் வலியுறுத்தினார். வரியையும் குறைத்து, மக்களின் வாழ்க்கைச் சுமையையும் குறைப்பதாக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் மக்களுக்கு வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். அவர்கள் கூறும் பாதையில் சென்றால் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து இல்லாத பாதைக்கே மக்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

‘‘முன்பு எஹலியகொடவில் கூட்டம் நடத்தும் போது எமது மேடையில் பவித்ரா வன்னியாரச்சியை விமர்சித்து உரை நிகழ்த்தப்படும். பவித்ரா வன்னியாரச்சியின் கூட்டங்களில் அவர் என்னை விமர்சிப்பார். ஆனால் இன்று நாம் அனைவரும் நாட்டை மீட்பதற்காக கட்சி பேதமின்றி ஒன்றிணைந்துள்ளோம். நீங்கள் மருந்து, கேஸ், எரிபொருள் இன்றி கஷ்டப்பட்ட போது நாம் ஒன்றிணைந்து நாட்டை மீட்டோம். அநுரவும் எனது முன்னாள் பிரதித் தலைவர் சஜித்தும் மாத்திரம் எம்முடன் இணையவில்லை. நாம் திருடுவதற்காக இணைந்துள்ளதாக அவர்கள் விமர்சிக்கின்றனர். கட்சியை நேசிப்பது போலவே நாட்டையும் நேசித்ததாலே நாம் ஒன்றிணைந்துள்ளோம். எமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

இரு மக்கள் சக்திகள் இருந்த போதும் அவர்களுக்கு மக்களின் வலி தெரியவில்லை. நாம் அந்த வலியை உணர்ந்தோம். 2019ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தி 89 பில்லியன் டொலர் இருந்தது. நான் நாட்டைப் பொறுப்பேற்ற போது 76 பில்லியன் டொலர்களாக அது குறைந்திருந்தது. ஒருநாள் ஒரு டொலர் கூட பணம் இருக்கவில்லை. அந்த நாளில் 2000 டொலர்கள் என்னிடம் இருந்தது. அன்று தாய்நாட்டை விட நான் செல்வந்தராக இருந்தேன். இன்று தாய்நாடு என்னை விட செல்வந்த நாடாக மாறியுள்ளது.

அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைந்த நிலையில் ரூபாவின் பெறுமதி 100 வீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. பொருட்களின் விலை 100 வீதத்தினால் உயர்ந்தது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அதிலிருந்து மீள்வதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். கிரீஸில் பொருளாதார வீழ்ச்சியுடன் அரச ஊழியர்களின் சம்பளம் 40 வீதத்தினால் குறைக்கப்பட்டது. எமது நாட்டில் அன்று அரச ஊழியர்கள் கஷ்டப்பட்டனர். நகை கடைகளில் அதிகளவான நகைகள் அடகுவைக்கப்பட்டன. அனைவரும் கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்தனர். இன்று சிவப்புப் பருப்பு விலை 40 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. டீசல் மற்றும் கேஸ் என்பன 33 வீதத்தினால் குறைந்துள்ளது. 40 ரூபாவாக இருந்த பஸ் கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் கஷ்டத்துடன் வாழும் 25 வீதமான மக்கள் உள்ளன. மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ரூபாவின் பெறுமதி பலப்படுத்தப்பட்டது. மொத்த தேசிய உற்பத்தியை 84 பில்லின் டொலர்களாக உயர்த்தியுள்ளேன்.. குறைந்த வருமானம் பெறுவோருக்காக அஸ்வெசும அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வருடத்தில் வரிச்சலுகை மற்றும் சம்பள உயர்வு வழங்க முடியவில்லை.

ஆனால் 2024 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு 5000 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. பின்னர் அது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. அடிப்படைச் சம்பளம் உயர்த்தப்படுகிறது. எம்மிடம் உள்ள பணம் அதிகரிப்பதோடு நிவாரணம் வழங்க ஆரம்பித்தோம்.

370 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி 300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இது 260 ரூபாவாக வீழ்ச்சியடையும் போது மேலும் அதிகமாக சலுகைகள் வழங்கலாம்.. மக்கள் படும் வேதனை எமக்குத் தெரியும். அதனை போக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். உழைக்கும் போதான வரியை திருத்த ஜஎம்எப் உடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எமது யோசனையும் ஜஎம்எப் யோசனையும் ஆராயப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு முதலில் நிவாரணம் வழங்க வேண்டும். வரிகளின் ஊடாகவும் சலுகை வழங்கப்படும். அடுத்த இளைஞர் யுவதிகளுக்காக தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். விசேட கூட்டத்தின் ஊடாக எனது கொள்கைப் பிரகடனம் நாளை வெளியிடப்படும். அநுரவும் சஜித்தும் வரியை குறைப்பதாக கூறுகின்றனர். வரியை குறைத்தால் அரசின் வருமானம் குறையும். எவ்வாறு அதனை ஈடுசெய்ய முடியும். வருமானம் குறைந்து, செலவு அதிகரித்தால் என்ன நடக்கும். 15 வீதம் வருமானம் குறைந்து செலவு 15 வீதத்தினால் அதிகரித்தால் அதனை ஈடுசெய்வதற்கான பணத்தை எப்படி பெற முடியும்.

அந்த நிலையில் பணம் அச்சிட நேரிடும். பணம் அச்சிட்டால் ஜஎம்எப் ஒப்பந்தம் ரத்தாகும். இதில் வேறு மாற்று வழி இருந்தால் எதிரணி சொல்லட்டும். வருமானத்தை குறைத்து வரியை அதிகரித்து எவ்வாறு ரூபாவின் பெறுமதியை பாதுகாக்க முடியும். அந்த பாதையில் சென்றால் கேஸ், டீசல், பெற்றோல் அற்ற நிலை தான் உருவாகும். அந்த நிலைக்குச் செல்ல விரும்புகிறீர்களா? மேடைகளில் எம்மை திட்டித்தீர்ப்பதால் பயனில்லை. உங்களை வாழ வைப்பதற்கே நாம் அனைத்தையும் செய்கிறோம்.

அநுரவிற்கோ சஜித்திற்கோ அதனை செய்ய முடியாது. உங்கள் எதிர்காலம் குறித்து சிந்தித்து கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள்” என ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் வைத்தியர ரமேஷ் பத்திரண:
‘‘30 வருட யுத்தத்திற்கு முடிவு கட்டி தேசிய பாதுகாப்பை உறுதி செய்தவர் மஹிந்த ராஜபக்‌ஷ. அதேபோன்று நாட்டிற்கு பொருளாதார பாதுகாப்பும் உணவு பாதுகாப்பும் சுகாதார பாதுகாப்பும் முக்கியமானது. கொவிட் தொற்றினால் 16 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஏனைய நாடுகளில் பெருமளவானவர்கள் உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேறியிருந்தனர். வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு தாய்நாட்டுக்கு வர நேரிட்டது. வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியடைந்தது. இதனால் எரிபொருள், கேஸ், கொள்வனவு செய்ய பணம் இருக்கவில்லை. மின்உற்பத்திக்கான நிலக்கரி கொண்டுவர முடியவில்லை. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

பொருளாதார யுத்தத்திற்கு முடிவு கட்டிய ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் நன்றிக் கடன் செலுத்த வேண்டும். ரணில் விக்ரமசிங்க பதுளை, நுவரெலிய, மாத்தளை, யாழ்ப்பாணம். கண்டி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னிலையில் இருக்கிறார்.

வெனிசூலாவில் ஒரு இராத்தல் பாணுக்காக சண்டை பிடிக்கின்றனர். பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அனுபவமுள்ள தலைவர் கையில் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும். பரீட்சார்த்தம் செய்து பார்க்கும் காலம் இதுவல்ல” என்றார்.

ஆளுநர் நவீன் திசானாயக்க:
‘சகல சக்திகளும் இணைந்து 21 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க அணிதிரண்டுள்ளன. நாம் எமக்கிடையிலான பேதங்களை ஒதுக்கி நாட்டை கட்டியெழுப்புவதற்காக இணைந்துள்ளோம். ஜனாதிபதி ரணில் நாட்டை படிப்படியாக முன்னேற்றினார். மேலும் 1000 பேரை ஆசிரியர்களாக நியமித்து ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்” என்று தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர:
‘‘அனைவரினதும் கொள்கை பிரகடனத்தை விட நடைமுறைச் சாத்தியமான பிரகடனம் நாளை வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது. கடந்த காலத்தில் அரச துறையில் ஏற்பட்ட வெற்றிடங்கள் நிரப்பப்பட்டன. அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டது. பொருட்களின் விலைகளை குறைக்கவும் மின்கட்டணத்தை குறைக்கவும் முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே” என்றார்.

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன எம்.பி:
‘‘நாம் இதற்கு முன்னர் ஒரு கட்சி சார்பாகத் தான் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்துள்ளோம். சுதந்திரக் கட்சியில் இருந்து சந்திரிகா குமாரதுங்கவை தெரிவு செய்தோம். பின்னர் எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்தோம். பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவை மொட்டுக் கட்சியில் இருந்து தெரிவு செய்தோம். இன்று நாட்டை மீட்பதற்காக 30 இற்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. கட்சியில் வகித்த எமது பதவிகளை ஒதுக்கி மீண்டும் நெருக்கடியில் விழாமல் இருக்க ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைக்கும் போராட்டத்தில் குதித்துள்ளோம்.

2022 இல் வீதிகளில் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. காட்டுச்சட்டம் அமுலானது. இராணுவமும் பொலிசும் செய்வதறியாதிருந்தன. காட்டுச் சட்டத்தை ஒதுக்கி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே நாட்டுத் தலைவரின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை நிறைவேற்றிய ரணில் விக்ரமசிங்கவை நாம் உயர்வாக மதிக்கிறோம். அன்று ‘முடியாது’ என்று பின்வாங்கிய சஜித்திற்கும் அநுரவிற்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி முடியாது என துரத்த வேண்டும்” என்றார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி:

‘‘எஹலியகொட வரலாற்றில் மிக வெற்றிகரமான கூட்டமொன்றை நடத்த முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தாய்நாட்டை வெல்ல வைப்பதற்கே இன்று பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். பொதுஜன பெரமுன. சு.க,ஐ.தேக, இ.தோ.க, இடது சாரி கட்சிகள் என அனைத்து கட்சிகளும் நாட்டின் ஸ்தீரத்தன்மையை உறுதி செய்யவே இன்று இணைந்துள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் நேரடி வரியையும் மறைமுக வரியையும் குறைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன ஆட்சியில் பொருளாதார வித்துவான்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதேபோன்ற ஒன்றை செய்ய முற்பட்டதாலே நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிய நோயாளி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த நோயாளியை மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பப் போகிறோமா? குணப்படுத்தப் போகிறீர்களா?

போட்டி போட்டுக் கொண்டு சஜித்தும் அநுரவும் வாக்குறுகளை அடுக்குகிறார்கள். எப்படியாவது வெல்வதற்காக வாக்குறுதிகளை அள்ளிவழங்கும் அரசியல் இனியும் தேவையில்லை. நிவாரணப் பொதிகளை காட்டி தேர்தல் கோரும் கோமாளிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்லக் கூடிய சாத்தியமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக ஒன்று திரண்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x