ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.பியாக அண்மையில் பெயரிடப்பட்ட அலி ஸாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக செயற்பட்டமை தொடர்பில் அவரது கட்சி உறுப்புரிமையை பறிக்க கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதனைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு தெரிவித்து அவர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இன்று (28) கொழும்பு மாவட்ட நீதவான் சந்துன் விதான முன்னிலையில் குறித்த மனு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தடையுத்தரவை பிறப்பிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு எதிராகவே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் அன்றையதினம் வரை இந்த தடையுத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கடந்த ஓகஸ்ட் 04ஆம் திகதி கூடி தீர்மானித்தது.
ஆயினும் தான் கட்சியின் குறித்த உயர்பீடக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் முறைப்பாட்டாளரான அலி சாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பதாகக் குற்றம் சுமத்தி, எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் இன்றி தமது கட்சி உறுப்புரிமையைப் பறிக்கும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயற்படுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் முடிவுகளுக்கு மாற்றமாக நடந்து கொண்டதாக தெரிவித்து எம்.பி. பதவியை இழந்த நசீர் அஹமட்டின் இடத்திற்கே அலி ஸாஹிர் மௌலானா எம்.பியாக தெரிவாகியிருந்தார்.
அத்துடன் அண்மையில் ஐ.ம.ச. கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்பட்டதாக, மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோர் தமது எம்.பி. பதவிகளை இழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நசீர் அஹமட்டின் இடத்திற்கு மு.கா. எம்.பியாக அலி ஸாஹிர் மௌலானா