Monday, October 7, 2024
Home » விவசாயிகளுக்கான உர மானியத்தை ரூ. 25,000 வரை அதிகரிக்க நடவடிக்கை

விவசாயிகளுக்கான உர மானியத்தை ரூ. 25,000 வரை அதிகரிக்க நடவடிக்கை

- நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ரூ. 500 மில்லியன் நிதியொதுக்கீடு

by Prashahini
August 27, 2024 2:35 pm 0 comment

இலங்கை பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டம்
– 2025 இற்கான இலவச பாடநூல்களை அச்சிடல்
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 14 முடிவுகள்

தற்போது ஒரு ஹெக்ரயருக்கு வழங்கப்படுகின்ற ரூ. 15,000/- உர மானியத்தை, ஹெக்டயர் ஒன்றுக்கு ரூ. 25,000 வரை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 14 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

2024 சிறுபோகச் செய்கையின் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சிறுபோகச் செய்கையின் நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக சலுகை வட்டி வீதத்தின் அடிப்படையில் வணிக வங்கிகள் ஊடாக உயர்ந்தபட்சம் 6,000 மில்லியன் ரூபாய்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடனை வழங்குவதற்காக ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நெல் கொள்வனவின் போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் தொடர்ந்து வரும் பெரும் போகத்தில் நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி, விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 2024 சிறுபோகச் செய்கையின் நெல் அறுவடையை அரசு கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தில் பங்கெடுப்பதற்கு இயலுமாகும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 500 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்தல்.

• நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நாட்டரிசி ஒரு கிலோவிற்கு 105/- ரூபாவாகவும், சம்பா நெல் ஒரு கிலோவிற்கு 115/- ரூபாவாகவும், கீரி சம்பா நெல் ஒரு கிலோவிற்கு 130/- ரூபாவாகவும் கொள்வனவு செய்தல்.

• தொடர்ந்து வரும் பெரும்போகச் செய்கையில் உயரிய நெல் அறுவடையைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் நெற் செய்கைக்கு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக தற்போது ஒரு ஹெக்ரயருக்கு வழங்கப்படுகின்ற ரூ. 15,000/- உர மானியத்தை, ஹெக்ரயர் ஒன்றுக்கு ரூ. 25,000/- வரை அதிகரித்தல்.

02. செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இலங்கையின் தேசிய மூலோபாயத்திட்டம்

இலங்கை தற்போது தனது டிஜிட்டல் நிலைமாற்றத்திற்கான பயணத்தில் குறிப்பிடத்தக்களவு பெறுபேறுகளை அடைந்திருப்பினும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தொடர்பாகக் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இயலுமை கிட்டவில்லை. விவசாயம், சுகாதார சேவைகள் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், அரச சேவைகளை மேம்படுத்துவதற்கும் இயலுமை காணப்படுகின்றது. அதன்மூலம், பேண்தகு பொருளாதார விருத்தியை அடைவதற்கும் மற்றும் வறுமையை ஒழிப்பதற்பதற்காக முக்கிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், செயற்கை நுண்ணறிவின் பயன்களை சமூகத்தில் நியாயமாகப் பகிர்ந்தளிப்பதற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

செயற்கை நுண்ணறிவு அபிவிருத்தி மற்றும் பயன்பாட்டின் மூலம் டிஜிட்டலால் வலுவூட்டப்பட்ட இலங்கையை உருவாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இலங்கையின் தேசிய மூலோபாயத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையை செயற்கை நுண்ணறிவு தொடர்பில் பிராந்தியத்தின் மத்தியநிலையமாக மையப்படுத்துவதற்கும், மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை மற்றும் பொருளாதாரத்தின் தாங்குதிறனை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த நோக்கங்களை அடைவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இலங்கையின் தேசிய மூலோபாயத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. வோட்டர் ஃப்ரன்ட் புரொப்பர்டீஸ் (பிரைவெட்) லிமிட்டட் கூட்டு ஆதன வதிவிட வீடுகளைக் கொள்வனவு செய்தவர்களின் அனுபவிப்பு மற்றும் சேவை உரிமைகளுக்காகக் காணித் துண்டொன்றை ஒப்படைத்தல்

சொகுசு கூட்டு ஆதன இயல்புகளைக் கொண்டமைந்த வீட்டு வசதிகள் அபிவிருத்தி உள்ளிட்ட சுற்றுலாத்துறை சார்ந்த கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்க்ஸ் கம்பனிக்கு அல்லது அதன் பெயர் குறித்துரைப்பவருக்கு 99 ஆண்டுகள் காலப்பகுதிக்கு 3.03 ஏக்கர் காணித்துண்டு இலங்கை முதலீட்டு சபையால் நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்க்ஸ் கம்பனியால் பெயர் குறித்துரைப்பட்டதான வோட்டர் ஃப்ரன்ட் புரொப்பர்டீஸ் (பிரைவெட்) லிமிட்டட் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபைக்கும் இடையில் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இக்கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் 06 கோபுரங்களில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள 425 கூட்டு ஆதன வீடுகள்/அடுக்குமாடி வீட்டு அலகுகள் உள்ளிட்ட 03 கோபுரங்கள் கட்டுமானங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வணிக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 03 கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

கூட்டு ஆதன சொத்துக்குரிய காணித்துண்டுக்கு வெளியே குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள 60.5 பேர்ச்சர்ஸ் காணியொன்று குறித்த வீட்டுக் கொள்வனவாளர்களால் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காணித்துண்டு பொது வசதிகளை வழங்குகின்ற சேவை வழங்கும் வீதியாகவும், மற்றும் தொலைக்காட்சி, தொலைபேசிஃதொலைத்தொடர்பு சேவைகள், வீதி உரிமைகள் போன்ற கட்டுமானங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால்,குறித்த காணித்துண்டின் மீதான அனுபவிப்பு மற்றும் சேவை உரிமைகள் வோட்டர் ஃப்ரன்ட் புரொப்பர்டீஸ் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்திற்கு கூட்டு ஆதன வதிவிட வீட்டுக் கொள்வனவாளர்களின் பயன்பாட்டுக்காக ஒப்படைப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை, ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு உடன்படிக்கை

ஏற்றுமதி ஆற்றல் வளங்கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை, எற்றுமதியாளர்களாக மாற்றும் நோக்கில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் புதிய ஏற்றுமதியாளர்களை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வசதிகளை வழங்குவதற்காக சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கும் இடையிலான ஒத்துழைப்பு உடன்படிக்கை வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் மற்றும் வெளிவிவகார அமைச்சின் விதந்துரையும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கிணங்க, உத்தேச ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இருதரப்பினருக்கிடையில் கையொப்பமிடுவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான பொலொன்தலாவ பண்ணையின் காணித்துண்டொன்று ஜெஃப்ரி பாவா மன்றத்திற்கு வழங்கல்

தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான பொலொன்தலாவ பண்ணையின் முகாமையாளர்களின் உத்தியோகபூர்வ இல்லம், இலங்கையின் பிரசித்த கட்டிடக்கலைஞரான தேசாபிமானி ஜெஃப்ரி பாவா அவர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அது அமைந்துள்ள 05 ஏக்கர் காணித்துண்டை குத்தகை அடிப்படையில் தமக்கு வழங்குமாறு ஜெஃப்ரி பாவா மன்றத்தால் கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க,பொலொன்தலாவ பண்ணையின் முகாமையாளர்களின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் குறித்த உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள 05 ஏக்கர் காணித்துண்டை குத்தகை அடிப்படையில் ஜெஃப்ரி பாவா மன்றத்திற்கு வழங்குவற்காக விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான நிதி உடன்படிக்கையில் கையொப்பமிடல்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதிவசதிக்கு இணையாக அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் வேலைத்திட்டத்தின் மூலம் உலக வங்கி இலங்கையில் நீடித்த மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்காக ஒத்துழைப்பு வழங்குகின்றது. இவ்வேலைத்திட்டம் இரண்டு ஆண்டு வேலைத்திட்டமாக அமைவதுடன், அதன் முதலாம் கட்டம் 2023 ஆம் ஆண்டில் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் அரசின் மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக விசேட எடுத்தல் உரிமையாக 150.6 மில்லியன்கள் (அமெரிக்க டொலர்கள் 200 இற்கு சமமான) நிதியை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, குறித்த நிதிவசதியைப் பெற்றுக் கொள்வதற்குரிய உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான இணை நிறுவனத்துடன் குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. ஐக்கிய நாடுகள் சபையின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

கீழ்க்காணும் துறைகளில் பரஸ்பர நன்மைகள் மற்றும் வசதிகளை வழங்குவதற்குத் தேவையான ஒத்துழைப்பு வேலைச் சட்டகமொன்றை தயாரிக்கும் நோக்கில் 03 ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது :

• பேண்தகு அபிவிருத்திக்கான 2030 ஆம் ஆண்டு நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான பயிற்சிகள் மற்றும் கற்றல் ஒத்துழைப்புக்கள்
• மாநாடுகள், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள், பல்தரப்பு பேச்சுவார்த்தைகள், தொடர்பாடல் திறன் விருத்தி, இடையீடுகள் மற்றும் தலைமைத்துவம், உள்ளடக்கங்களை அடிப்படையாகக் கொண்ட செயலமர்வுகள் மற்றும் காலநிலை மாற்றம், மனித உரிமைகள் தொடர்பான விசேட பாடநெறிகள் போன்ற துறைகளில் இராஜதந்திரிகளைப் பயிற்றுவித்தல்.
• குறித்த இடர்களைக் குறைப்பதற்காகவும், நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்காக புவியியல் தகவல் முறைமையின் (GIS) பயன்பாடு பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நடவடிக்கை செய்மதி உபயோக வேலைத்திட்டம் (UNOSAT) மூலம் பயிற்சிகளை வழங்கல்.

08. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக இலங்கைக்கு வருகைதரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான நிர்வாக ஏற்பாடுகள்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக எமது நாட்டுக்கு கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஒன்றியத்தின் ஒழுங்குவிதிகளுக்கமைய தேர்தல் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கைக்கு வருகைதரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான நிர்வாக ஏற்பாடுகளில் கையொப்பமிடல் வேண்டும். அதற்கிணங்க, இருதரப்பினருக்கும் இடையில் 2024.08.05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான நிர்வாக ஏற்பாடுகளில் கையொப்பமிடப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையின் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

09. 2025 ஆம் ஆண்டில் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ள பாடசாலைப் பாடநூல்களை அச்சிடல்

2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடநூல்களை அச்சிடுவதற்காக 317 வகையான பாடநூல்களில் 71 வகையான பாடநூல்களை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திடமிருந்து அச்சிடுவதற்காக 2024.04.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல்களை விநியோகிப்பதற்குத் தேவையான எஞ்சியுள்ள 246 பாடநூல் வகைகளை அச்சிடுவதற்காக தேசிய போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள குறைந்த விலைமனுவை சமர்ப்பித்துள்ள 24 அச்சகங்களுக்கு, 1, 6 மற்றும் 10 ஆம் தரங்கள் தவிர்ந்த ஏனைய தரங்களுக்கான பாடநூல்களை அச்சிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வீதியின் குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைத்தல்

அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் அனுசரணையுடன் வீதிக்கட்டமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தில் எஞ்சியுள்ள நிதியின் மூலம் கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வீதியின் குறிளஞ்சாக்கேணி பாலத்தைப் புனரமைப்புச் செய்வதற்கான ஒப்பந்தத்தை தனியாக கட்டம் தனியான கடித உறை முறைமையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக, 09 விலைமுறிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கிணங்க, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள விலைமனுதாரரான ஈ.எல்.எஸ். கன்ஸ்ரக்ஷன் (தனியார்) கம்பனிக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2024 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (கூட்டாதன முகாமை) ஒழுங்குவிதிகள்

கொழும்பு துறைமுக நகரத்தின் பிரதான திட்டத்திற்கமைய, சராசரி நில அளவின் 51% சதவீதம் வதிவிடப் பயன்பாட்டுக்க ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதன்மூலம் கூட்டாதன அபிவிருத்திக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கூட்டாதனப் பங்குகளின் உரிமையாளர்களுக்கும், வாடகைதாரர்களுக்கு இடையூறுகளின் வசிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்கி, சர்வதேச தரநியமங்களுடன் கூடிய பொது வாழ்வசதிகள் மற்றும் பொது அம்சங்களைப் பேணிச் செல்வதற்கு ஒழுங்குபடுத்தல் நிறுவனமொன்றை தாபித்தல் மற்றும் ஒழுங்குவிதிகளை விதிக்க வேண்டியுள்ளது. 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுகப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 2394/68 ஆம் இலக்க 2024.07.26 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2024 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (கூட்டாதன முகாமை) ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. இலங்கை பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தல்

இலங்கை பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக முன்னாள் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்களும், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனை 2024.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் அனைத்துத் தரப்பினர்களின் பங்கேற்புடன் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த கருத்தாக்கப் பத்திரத்தை தொடர்ந்து பகுப்பாய்வு செய்வது பொருத்தமானதெனத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, காணி, வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் மற்றும் நிதி போன்ற விடயதானங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் அதிகாரிகள், சட்டமா அதிபர் அலுவலகத்தின் அதிகாரிகள், சட்ட வரைஞர் அலுவலகத்தின் அதிகாரிகள் உள்ளடங்கலாக, ஏற்புடைய துறைசார் ஆர்வலர்களுடன் பங்கேற்புடனும், பிரதமரின் செயலாளர் தலைமையில் சில கலந்துரையாடல் சுற்றுக்களை நடாத்தி, அடிப்படை சட்டமூல வரைபு மேம்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அடிப்படை சட்டமூல வரைபை அடிப்படையாகக் கொண்டு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் , புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபையில் இணைக்கப்பட்டு சேவையாற்றிய ஊழியர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் சேர்த்துக் கொள்வதற்காக வாய்ப்பு வழங்கல்

2013 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வாழ்வின் எழுச்சி சட்டத்தின் மூலம் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தைத் தாபிக்கும் போது, முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இணைப்புச் செய்யப்பட்டு சேவையாற்றிய ஊழியர்களுக்கு குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, தமது சுயவிருப்பின் பேரில் ஓய்வூதியத்துடன் கூடிய அப்போதிருந்த வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சேர்க்கப்படுவதற்கு பல சந்தர்ப்பங்களில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும், பல்வேறு காரணங்களால் தமது விருப்பை மாற்றிக் கொள்ள முடியாது போன 3,000 ஊழியர்கள் இருக்கின்றமை அடையாளங் காணப்பட்டுள்ளனர். அதற்கிணங்க, காணப்படுகின்ற சட்ட வரையறையில், அரச சேவைகள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை கேட்டறிந்து வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சேர்த்துக் கொள்வதற்கு குறித்த ஊழியர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

14. உத்தேச திறன் விருத்தி வேலைத்திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தல்

தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவால் முன்னுரிமையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்காக கீழ்க்காணும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன :

(i) மாணவர் மைய நிதித்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அரச மற்றும் தனியார் துறையின் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலமாக ஒரு வருடத்தில் 50,000 பேர் வீதம் தொழில் அடிப்படையிலான பயிற்சி புலமைப்பரிசில்களை மாணவர்களுக்கு வழங்கல்

(ii) இரண்டாம்நிலைக் கல்வி பயில்கின்ற மாணவர்களை இலக்காகக் கொண்ட 60,000 தொழிற்பயிற்சிப் பாடநெறிகளுக்கான வாய்ப்புக்களை வழங்கல்

அதற்கமைய, குறித்த முன்மொழிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு தற்போது அரச மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாட்டுடன் நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள 100 மில்லியன் ரூபாய்கள் முதலீடு செய்வதற்கு இயலுமாகும் வகையில் திறைசேரியால் 2025 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வரும் 05 வருடங்களுக்கு நிதியொதுக்கீடு செய்வதற்கும், தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்கும்,அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழு மற்றும் கல்வி அமைச்சும் இணைந்த குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x