Home » சஜித்துக்கும், அனுரவுக்கும் ஜனாதிபதி பகிரங்க சவால்

சஜித்துக்கும், அனுரவுக்கும் ஜனாதிபதி பகிரங்க சவால்

- IMF உடன் வெளிப்படையாக கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு

by Prashahini
August 25, 2024 9:37 pm 0 comment

மக்களுக்கு பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் இணையவழி முறையில் பகிரங்க கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு சவால் விடுகிறேன்.

இதன் மூலம் அவர்கள் மேடைகளில் சொல்லும் விடயங்களின் உண்மைத் தன்மைமையை முழு நாட்டு மக்களும் கண்டுகொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

ஐக்கிய தேசிய கட்சி விசேட சம்மேளன கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (25) கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு வீழ்ச்சியடைந்திருந்தபோது யாரும் முன்வராத காரணத்தினாலே நான் முன்வந்தேன். இலங்கை இல்லாமல் போனால் ஐக்கிய தேசிய கட்சியும் இல்லாமல்போகிறது. ஐக்கிய தேசிய கட்சியை நிர்மாணித்த டீ.எஸ். சேனாநாயக்க எமக்கு கற்றுத்தந்த விடயங்களின் அடிப்படையிலேயே நான் நாடு இல்லாமல்போகும் நிலையில் நாட்டை பாதுகாத்து கட்சியை பாதுகாக்க முன்வந்தேன். இந்த விடயங்கள் எம்மில் இருந்து சென்றவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு கட்சியின் வரலாறு தெரியாது.

எதிர்வரும் தேர்தல் தீர்மானமிக்க தேர்தலாகும். இதில் நான் வெற்றிபெற வேண்டும் இல்லை என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நான் வெற்றிபெற வேண்டும் என்றால். வீடு வீடாக சென்று மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த ஆரம்பிக்க வேண்டும். அன்று நாடு வீழ்ச்சியடையும்போது பலரும் எம்முடன் இணைந்துகொண்டு நாட்டை கட்டியெழுப்ப முன்வந்தனர். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் நாட்டுக்கு அநீதி செய்தன. அவர்கள் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவே முயற்சித்தனர்.

ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவந்தபோதும் நானே அவரை பாதுகாத்தேன். அதேபோன்று அவர் கொலை செய்யப்பட்டபோதும் நானே அந்த இடத்துக்கு ஆரம்பமாக சென்றேன். இதனை அவர்கள் மறந்துள்ளார்கள். அவர்கள் ஓடியதாலே நான் பொறுப்பேற்றேன். நாங்கள் ஒரு அணியாக செயற்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தோம். இந்த அணியே உலக நாடுகளுடனும் சர்வதேச நாணய நிதியத்துடனும் கலந்துரையாடி உதவிகளை பெற்றுக்கொண்டு. இந்த நிலைக்கு நாட்டை கொண்டுவந்தோம்.

அதிகாரத்துக்கு வந்தால் வரியை குறைப்பதாக சஜித் பிரேமதாசவும் அனுரகுமாரவும் தெரிவிக்கிறார். அவர்கள் இதனை எவ்வாறு செய்யப்போகிறார்கள் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். வரியை குறைத்ததாலே நாடு வீழ்ச்சியடைந்தது என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.

அதனால் இரவில் விழுந்த குழியில் பகலில் விழ வேண்டுமா என கேட்கிறேன். நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை திருத்துவதாக தெரிவிக்கின்றனர். இரண்டு தரப்பினருடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்ததை இலகுவில் மாற்ற முடியாது. அவ்வாறு செய்வதாக இருந்தால், 18 நாடுகளுடன் 3 அமைப்புகளுடன் கலந்துரையாட வேண்டும். நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள எங்களுக்கு ஒரு வருடகாலம் சென்றது.

மேலும் நாணய நிதியத்தின் அதிகாரிகள் அடுத்த வருடம் ஆரம்பத்தில் இலங்கை வர இருக்கின்றனர். எமது முன்னேற்ற நடவடிக்கை தொடர்பில் இதன்போது அவர்கள் ஆராய்வார்கள். நாங்கள் இந்த தேர்தலில் வெற்றிபெற்றால் தொர்ந்து நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடன் முன்னுக்கு செல்ல தயார் என தெரிவிப்போம்.

ஆனால் சஜித், அனுர என்ன சொல்லப்போகிறார்கள். நிபந்தனைகளை திருத்தியடைப்பதாக இருந்தால் ஒரு மாதம் காலம் செல்லும் தற்போது நாணய நிதியம் எமக்கு வழங்கி இருக்கும் நிதி ஜனவரி வரைக்கும் போதும் அதன் பின்னர் நிபந்தனைகளை மாற்றியமைக்கும்வரை நாணய நிதியத்தின் 700 பில்லியன் டொலர் நிறுத்தப்படும். அப்படியானால் நாட்டை கொண்டு செல்ல இவர்கள் பணம் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்போகிறார்கள்.

அதனால் அவர்கள் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்றியமைப்பதாக தெரிவிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். அதனால் இனியும் மக்களுக்கு பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் இணையவழி முறையில் பகிரங்க கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு சவால் விடுகிறேன். இதன் மூலம் அவர்கள் மேடைகளில் சொல்லும் விடயங்களின் உண்மைத் தன்மைமையை முழு நாட்டு மக்களும் கண்டுகொள்ள முடியும் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT