Saturday, December 14, 2024
Home » ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் காலமானார்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் காலமானார்

- திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்

by Prashahini
August 23, 2024 9:43 am 0 comment

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த 79 வயதுடைய ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானார்.

இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

திடீரென சுகயீனமடைந்த ஜனாதிபதி வேட்பாளரான ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு காலமானதாக கூறப்படுகிறது.

இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உருவாக்கத்திற்கு அக்கட்சியின் தலைவராக இருந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபுடன் இணைந்து மிகத் தீவிரமாக செயற்பட்டுள்ளார்.

இலங்கையில் வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவானது மாத்திரமன்றி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவானார்.

இலங்கை – ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் நட்புறவை பேணி வருவதற்கும் டாக்டர் ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் மரணிக்கும் வரை செயற்பட்டு வந்துள்ளார்.

புத்தளத்தில் பல அரசியல் தலைவர்களை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இவர், வைத்தியராக பணியாற்றிய காலங்களில் புத்தளத்தில் இலவச மருத்துவ சேவைகளையும் முன்னெடுத்து வந்துள்ளார்.

இலங்கையில் நடைபெறும் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஒரு வேட்பாளராக போட்டியிட்டு வந்துள்ள இவர், இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் ஒரு வேட்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (23) புத்தளம் பகா முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT