2025 ஜனவரி முதல் அனைத்து அரச ஊழியர்களினதும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக, அரச சேவை சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன தெரிவித்தார்.
அதற்கமைய தற்போது அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான ரூ. 24,000 ஐ ரூ. 30,000 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்றையதினம் (22) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய குறைந்த தரங்களுக்கு 24% அடிப்படை சம்பள அதிகரிப்பு உயர் பதவிகளுக்கு 24% முதல் 50% வரையிலான அதிகரிப்பு மேற்கொள்ளவுள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டார்.
குறித்த அதிகரிப்புக்கு திறைசேரியின் இணக்கத்துடன் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்த அவர், தகுதிகள், அனுபவம் மற்றும் தற்போது வகிக்கும் பதவியின் அடிப்படையில் இந்த சம்பள அதிகரிப்பு அமையும் எனவும் இங்கு சுட்டிக்காட்டினார்.
அது மாத்திரமன்றி வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை ரூ.25,000ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக உதய செனவிரத்ன இங்கு குறிப்பிட்டார்.
தற்போதைய பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு, ஜனவரி 2025 முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ரூ. 25,000 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டார்.
அந்த வகையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிப்புடன் அரச ஊழியர் ஒருவர் ரூ. 55,000 சம்பளத்தை பெறுவார் என அவர் இங்கு குறிப்பிட்டார்.
ஜனவரி 2025 முதல் 3 வருடங்களுக்கு இந்த ரூ. 25,000 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மாற்றமின்றி பேணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஓய்வூதியர்களுக்கு 2025 ஜனவரி முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக தலா ரூ.12,500 வழங்கப்படவுள்ளது.
அத்துடன் 2020ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு இதுவரை செலுத்தப்படாத சம்பள உயர்வை வழங்கி, அவர்களது ஓய்வூதியத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிதி சாத்தியத்தின் அடிப்படையில் 2025 வரவு, செலவுத் திட்டத்தின் மூலம் படிப்படியாக பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தேர்தலை அடிப்படையாகக் கொண்டதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
“எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும், கடந்த காலங்களில் அரச ஊழியர்கள் வீதிகளில் இறங்கி முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு சம்பள முரண்பாடுகளை களையவே இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதாகவும் உதய ஆர். செனவிரத்ன சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தால் இது தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கு முறையான தீர்வு காணும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழு எனும் வகையில் உரிய முறையில் ஆராய்ந்து முன்வைக்கப்பட்ட யோசனை இதுவாகும் என அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் அபிவிருத்தியில் அரச சேவை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதோடு அது அபிவிருத்திக்கான உந்து சக்தியாகும். தற்போது அரச சேவையில் உள்ள அனைத்து சவால்களையும் நிவர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு, அரச ஊழியர்களை திருப்திகரமான பணிச்சூழலை எற்படுத்துதல், மக்களுக்கு சிறந்த சேவை, பொருளாதார வளர்ச்சியில் முன்னணிப் பாத்திரத்தை வகிப்பதற்கான உந்து சக்தியாக மாற்றும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டத்தையும், சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட குழு முன்வைத்துள்ளது.
அரச ஊழியர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் வகையில், அக்ரஹார மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்பட்டு, அரசு ஊழியர்களின் சுகாதாரச் செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியம் பெறுவோர் உட்பட ஒவ்வொரு அரச ஊழியர்களுக்கும், மாதாந்தம் ரூ. 1,000 பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் மருத்துவப் பலன்கள் கொண்ட காப்புறுதி திட்டத்தின் மூலம் அதிக பலன்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், அக்ரஹார திட்டத்தை செயல்படுத்தும் தேசிய காப்புறுதி அறக்கட்டளை நிதி மூலம், தெரிவு செய்யப்பட்ட அரச மருத்துவமனைகளில் அரச ஊழியர்களுக்கான விசேட வசதிகளுடன் கூடிய மருத்துவமனை வசதிகளை மேம்படுத்தி தேசிய மருத்துவமனை கட்டமைப்பை நவீனமயமாக்குவதன் மூலம் அரச ஊழியர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வசதிகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச சேவையின் வினைத்திறனையும் செயற்திறனையும் விருத்தி செய்து மக்களுக்கு சிறந்த அரச சேவையை வழங்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு அரச சேவையில் விஞ்ஞான ரீதியில் வேலை ஆய்வு (Work Study) நடத்தப்பட்டு உரிய வகையில் அரச சேவையை மறுசீரமைப்பதற்கான விஞ்ஞான ரீதியான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன் மூலம் தேவைக்கேற்ப அரச சேவையில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை சரியான முறையில் மதிப்பீடு செய்யப்படும்.
அரச ஊழியர்களுக்குப் பொருத்தமான செயல்திறன் குறிகாட்டிகளை (KPI) அறிமுகப்படுத்தி அந்த செயல்திறன் முன்னேற்றத்தின் அடிப்படையில் வருடாந்த சம்பள உயர்வு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
மேலும், அவர்களின் செயல்திறன் முன்னேற்றத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகை மற்றும் பிற நிதி அல்லாத பலன்களை வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச வரிக் கொள்கைக்குள் வரி செலுத்துவோருக்கு சிறந்த அரச சேவையை வழங்கும் தரமான அரச சேவைக்கான உகந்த அளவிலான அரசாங்க பொறிமுறையை தயார் செய்தவதற்கு, இலங்கை தகுதி வழிகாட்டி (SLQF) மற்றும் தேசிய தொழில் தகுதிகள் (NVQ) அடிப்படையில், போட்டித்தன்மையுடைய ஆட்சேர்ப்பு முறையின் கீழ் அரச சேவையில் ஊழியர்களை ஆட்சேர்க்கும் முறை நிறுவப்படும். இது தகுதியானவர்களுக்கு உரிய இடம் அளிக்கும் யுகத்தை உருவாக்கும்.
குறிப்பாக 2025 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளில், டிஜிட்டல் மயமாக்கல் (Digitalization) மற்றும் தன்னியக்கமாக்கலுக்கு (Automation) முன்னுரிமை அளித்து, சாத்தியமான அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பத்தை அரச சேவையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் இ- அரச சேவைக்கு (E-Governance) அரசாங்கத்தின் மூலதன முதலீட்டு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
குறிப்பாக, அரச வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் பொது சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், கிராம உத்தியோகத்தர் அலுவலகம் முதல் அரச அமைச்சுகள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்கள் வரை, டிஜிட்டல் அரச சேவையை செயல்படுத்துவதன் மூலம் சிறந்த அரச சேவையை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
பல ஆண்டுகளாக அரச திறைசேரியை நம்பியிருக்கும், அதேபோன்று, பாரம்பரிய திணைக்கள மாதிரியிலிருந்து விடுபட்டு, நவீனமயப்படுத்தப்பட்ட தொழில் முயற்சியாளர் மாதிரியாக மாற்றி, அனைவருக்கும் பயனளிக்கும் நிறுவனங்களாக இனங்காணப்பட்ட அரச நிறுவனங்களை மாற்றவும் அடுத்த மூன்று வருடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த நிறுவனங்களின் பங்கு உரிமையில் 30% அரசாங்கத்திடமும், 30% முதலீட்டாளர்களிடமும், 30% பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலமும் பொது மக்களிடமும், 10% நிறுவன ஊழியர்களுக்கு உரிமையாகும். மிகவும் ஜனநாயக நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட பொது மக்கள் நிறுவனங்களாக (Public Quoted Company) அமைக்கப்பட்ட நிறுவன குழுமங்களாக உருவாக்கப்படும்.
அந்த நிறுவனங்களின் சேவைக்கு பணியமர்த்தப்படும், ஓய்வூதிய உரிமையுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் தற்போதைய ஓய்வூதியத்தை தள்ளிப்போட்டு, அவர்களின் வயது 60ஐ எட்டிய பிறகு, ஓய்வூதிய உரிமை பெறுவதோடு, அந்த நிறுவனங்களில் பணிபுரியும் காலத்தில் ஏனைய சலுகைகளைப் பெற உரிமை உண்டு.
அரசாங்க செலவினங்களைக் குறைத்து தனியார் துறையை ஊக்குவிப்பதன் மூலம் சில அரச சேவைகளை வெளிப்புற சேவை வழங்குநர்களிடமிருந்து பெறுவதன் மூலம் உகந்த செயல்திறன் முறைகள் அறிமுகப்படுத்தப்படும். இது தேவையற்ற பணியாளர்களை அரச சேவையில் சேர்ப்பதை மந்தப்படுத்துவதோடு, மிகவும் பயனுள்ள சேவைகளை மேம்படுத்த அனுமதிக்கிறது. இது பொருளாதார சேவைகளை மேலும் விரிவுபடுத்தும்.
இலவசக் கல்வியில் இலங்கை பெற்றுள்ள நற்பெயர் மற்றும் சிறந்த மனித வளம் காரணமாக தற்போது வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு உள்ள கேள்வி காரணமாக, தற்போது இலங்கையர்கள் தொழிலுக்காகவும் உயர்கல்விக்காகவும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது வழமையாக உள்ளது. எனவே, இலங்கை பெறுமதிமிக்க மனித வளத்தை இழக்கும் அதேவேளையில் வெளிநாட்டுக் கல்விக்காக பெருமளவிலான அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்கு இழுக்கப்படுகிறது.
இலவச உயர்கல்வி வழங்குவதற்கான வரம்புகளுக்குள், வாய்ப்புள்ள ஏராளமான மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே, தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு பெற்றோர் அதிக செலவுகளை சுமக்க வேண்டியுள்ளது. போதிய பொருளாதார நன்மைகள் இல்லாத காரணத்தினால் பல்கலைக்கழக அறிவியலாளர்களும் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்து வருகின்றது.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக, இலவச உயர்கல்வியைப் பாதுகாத்து, பல்கலைக்கழகங்களுக்கு சட்ட மற்றும் நிர்வாக சுதந்திரத்தை வழங்கவும், அவற்றின் பௌதிக மற்றும் மனித வளங்களை திறம்பட பயன்படுத்தி நியாயமான அடிப்படை கொண்ட பொருளாதார செலவுகளுடன் கற்கைகளை நடத்த இடமளிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. அதன் மூலம், மேலதிக வருமான வழிகள் அதிகரிப்பதோடு, அனைத்து தரப்பினரும் நன்மைகளைப் பெறுவார்கள்.
இந்த முறையை மிகவும் திறம்பட உருவாக்கி வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், சர்வதேச மாணவர்கள் இலங்கையில் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கையை அறிவு மையமாக மாற்ற முடியும். இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முன்னணித் துறையாகவும் இதனை உருவாக்க முடியும்.
இலங்கையில் இலவச சுகாதார சேவைகள் நிறுவப்பட்டதன் காரணமாக, சுகாதார குறிகாட்டிகளில் இலங்கை சிறந்த நிலையை அடைந்துள்ளது. எனவே, இலங்கையின் சுகாதார மற்றும் சுகாதார நிபுணர்களுக்கான சர்வதேச அங்கீகாரமும் அதிகரித்துள்ளது.
ஆனால் தற்போதைய சவால்களுக்கு மத்தியில் இலங்கை சுகாதார நிபுணர்களுக்கான சர்வதேச கேள்வி அதிகரித்துள்ளதுடன், அதன்படி அவர்கள் வெளிநாடு செல்வதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமையை மாற்றுவதன் மூலம், இலங்கையில் இலவச சுகாதார சேவையை மேலும் சிறப்பானதாக்கி, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார சேவையை வழங்கும் மத்திய நிலையமாக மாறுவதற்கு இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது.
எனவே, இலவச சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் பாதுகாக்கப்படும் வகையில் முகாமைத்துவம் செய்து பொருளாதாரச் செலவின் அடிப்படையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதற்கான உத்திகள் தொடங்கப்படலாம்.
ஏற்கனவே சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள பௌதிக மற்றும் மனித வளங்களை திறம்பட பயன்படுத்தி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சுகாதார சேவையை மீள் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேமுறையைப் பயன்படுத்தி, ஆயுர்வேத மருத்துவச் சேவைகளையும் பொருளாதாரப் பலன்களை மேம்படுத்தக்கூடிய ஒரு பகுதியாக மாற்ற முடியும்.
குறிப்பாக சுகாதாரத்துறை சார்ந்த சுற்றுலாத்துறையில் முன்னணி மையமாக விளங்கும் இலங்கையின் ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
திறைசேரியின் பதில் செயலாளர் ஏ.கே. செனவிரத்ன மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
றிஸ்வான் சேகு முகைதீன்
றிஸ்வான் சேகு முகைதீன்