ஐ.ம.ச. இரத்தினபுரி மாவட்ட (நிவித்திகல தேர்தல் தொகுதி) பாராளுமன்ற உறுப்பினரான தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தற்போது (21) விசேட உரையொன்றை நிகழ்த்தும் அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டுக்காகவும், கட்சிக்காகவும் மாத்திரமன்றி தனது அரசியல் எதிர்காலத்திற்காக சஜித் பிரேமதாஸவுக்கு இன்னும் 5 வருடங்கள் பொறுமை காக்க முடியுமாயின் இன்று எமக்கு இந்த பாரிய சவால் எழுந்திருக்காது. நான் சஜித் பிரேமதாஸவிடம் தெரிவிக்க விரும்புகிறேன், உங்களை இந்த படுகுழிக்குள் தள்ளுவதன் ஒரேயொரு நோக்கம் உங்களை ஜனாதிபதியாக்குவது அல்ல அடுத்த தேர்தலில் இவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான முயற்சியே. இதற்கு எமது கட்சியை பலி கொடுப்பதை பாரக்க என்னால் முடியாது என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
தலதா அத்துகோரள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், அதன் பிரதித் தலைவராகவும் இருந்த காமினி அத்துகோரளவின் சகோதரி ஆவார்.
தலதா அத்துகோரள 2004 இல் முதன்முதலில் பாராளுமன்றத்திற்கு தெரிவானதோடு, 2010, 2015, 2020 பாராளுமன்றத் தேர்தல்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஐ.ம.ச. கட்சி சார்பில் 45,105 விருப்பு வாக்குகளைப் பெற்று தலதா அத்துகோரள பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.