Home » முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் பதவியில் இருந்து ஹரீஸ் நீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் பதவியில் இருந்து ஹரீஸ் நீக்கம்

- கட்சி முடிவுக்கு அமைய செயற்படாமையால் நடவடிக்கை

by Prashahini
August 20, 2024 2:54 pm 0 comment

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியில் இருந்தும், உயர் பீட உறுப்புரிமையிலிருந்தும் அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுடைய அறிவுறுத்தலுக்கு அமைவாக, கட்சியின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் – நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கு, இது தொடர்பில் இன்று (20) கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ள நிலையில், சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் உழைக்க வேண்டுமென கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவுறுத்தியிருந்தார். இருந்தபோதும், இதுவரையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடத்தப்பட்ட எந்தவொரு கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கலந்து கொள்ளவில்லை.

ஆயினும், அம்பாறை மாவட்டத்தின் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் – கட்சித் தலைவருடன் இணைந்து, சஜித் பிரேதமாசவை ஆதரித்து நடத்தப்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

மறுபுறமாக, முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா – ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவை அறிவித்தமையினால், அவர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, அரசாங்கத்திடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், 860 மில்லியன் ரூபாவை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x