Sunday, October 13, 2024
Home » சஜித்திற்கு ஆதரவளிக்கும் ஒப்பந்தத்தில் ரிஷாட் கையொப்பம்

சஜித்திற்கு ஆதரவளிக்கும் ஒப்பந்தத்தில் ரிஷாட் கையொப்பம்

- கட்சி உயர்பீட இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள்

by Rizwan Segu Mohideen
August 15, 2024 7:06 pm 0 comment

– தெரிவானால் பலஸ்தீனர்களுக்காக ஒரு பிரேரணை

தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதற்கு மக்கள் இணங்கியதாலும், கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் கிடைத்த நிலையில், சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க தீர்மானித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு, இன்று (15) கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைர்தீனும் கைச்சாத்திட்டனர்.

இங்கு உரையாற்றிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்ததாவது,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளோம். கட்சியின் உயர்பீடத்தில் இது குறித்து இரகசிய வாக்களிப்பு நடைபெற்றபோது கலந்துகொண்ட 47 பேரில், 31 பேர் சஜித்தை ஆதரித்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடு பூராகவும் சென்று மக்களிடம் கருத்துக்கேட்டபோது, கட்சியின் உயர்பீடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக தெரிவித்தனர். இதனால்தான், சஜித்பிரேமதாசவை ஆதரிக்கிறோம்.

இனவாதமில்லாத, வாக்குறுதிகளைக் காப்பாற்றும் நேர்மையான அரசியல்வாதி சஜித். அவருக்கு வழங்கப்படும் சன்மானங்களை மக்களுக்கே அன்பளிக்கும் உயரிய சிந்தனையாளர்.

எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படும் சஜித் பிரேமதாச, தனது சொந்த தொகுதிக்கு மட்டுமின்றி முழு நாட்டுக்குமே உதவி செய்கிறார். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் தூரநோக்கோடு செயற்படும் இவர், நானூறு கற்றல் திரைகளை பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளார். பாடசாலைகளுக்கு பஸ்வண்டிகளை அன்பளிப்புச் செய்யும் கலாசாரத்தை சஜித் பிரேமதாசவே அறிமுகஞ் செய்தார்.

சுகாதாரத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக வைத்தியசாலைகளில் மூச்சுவிடும் திட்டத்தையும் இவரே அறிமுகப்படுத்தினார். காலத்தின் தேவைக்கேற்ற புதுப்புது திட்டங்களை செயற்படுத்தும் இவரிடம் நாட்டை ஒப்படைப்பதே சிறந்தது.

ஜனாதிபதியாகத் தெரிவானால், பலஸ்தீனர்களுக்காக ஒரு பிரேரணை கொண்டுவரப்பட வேண்டுமென எமது கட்சி நிபந்தனை விதித்துள்ளது.1967 இற்கு முன்னர் பலஸ்தீன் இருந்ததைப் போன்று, பலஸ்தீன் பிரதேசத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதே அதுவாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x