Wednesday, September 11, 2024
Home » இலங்கையில் 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியா

இலங்கையில் 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியா

- சுதந்திர சதுக்கத்தில் ஓகஸ்ட் 15 - 18 வரை கண்காட்சி

by Rizwan Segu Mohideen
August 15, 2024 7:32 pm 0 comment

இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினம் இன்று (15) இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற பிரதான கொண்டாட்ட நிகழ்வு இந்திய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் நடைபெற்றிருந்தது.

இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்த உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

அத்துடன் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவரால் நாட்டு மக்களுக்காக ஆற்றப்பட்ட உரையின் சுருக்கங்களும் உயர் ஸ்தானிகரால் இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டது.

பல்வேறு கலை நிகழ்வுகள் இக்கொண்டாட்டங்களுக்கு மேலும் உயிர்ப்பூட்டியிருந்தன. இலங்கை கடற்படையின் இசைக் குழுவினர், தேசப்பற்றையும் வீரத்தையும் பிரதிபலிக்கும் மெல்லிசை மெட்டுகளை இங்கு இசைத்திருந்தனர். இதேவேளை இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் கலைஞர்களான ரஞ்சித் கோகோய் தலைமையிலான கலைஞர்களின் ஓர் ஆத்மார்த்தமான பிஹு நடன ஆற்றுகை விருந்தினர்களை கவர்ந்திருந்தது.

 

அத்துடன், இலங்கையின் சமாதானம் மற்றும் ஐக்கியத்தினை நிலை நிறுத்துவதற்காக அதியுயர் தியாகம் செய்த இந்திய படையினரை நினைவு கூரும் இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத்தூவியில் உயர் ஸ்தானிகரும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏனைய அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

இதேவேளை கண்டியில் உள்ள உதவி உயர் ஸ்தானிகராலயம் யாழ்ப்பாணத்தில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் காரியாலயம் மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் காரியாலயம் ஆகியவையும் இச்சிறப்பு வாய்ந்த தருணத்தினை குறிக்கும் முகமாக பல்வேறு விசேட நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தன.

இதேவேளை, 2024 ஓகஸ்ட் 15 முதல் ஓகஸ்ட் 18ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் நடைபெறும் பாரத் ஸ்ரீ லங்கா மைத்ரி உத்சவ் 2024 கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்க பூங்காவில் இன்றைய தினம் பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்விழாவில் இந்திய இலங்கை கலைஞர்களின் பாரம்பரிய கைவினைப் பொருட்களைக் கொண்ட கண்காட்சி மற்றும் அதனுடன் இணைந்த கலாசார நிகழ்வுகளும் உணவு கொண்டாட்டங்களும் நடைபெற உள்ளன. இவ்விழாவானது 2024 ஓகஸ்ட் 18ஆம் திகதி இரவு 10 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x