பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் வித்தியாசமான பெயர் கொண்ட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
Pardo Alla Carriera Ascona-Locarno Tourism என்பதே அந்த விருதின் பெயராகும். 58 வயதான ஷாருக் இந்தப் பெருமையைப் பெறும் முதலாவது இந்தியர் ஆவார்.
8,000 பேர் கூடியிருந்த Piazza Grande பியாஸ்ஸா கிராண்டே சதுக்கத்தில் இந்த விருது வழங்கப்பட்டது.
இதன்போது நகைச்சுவையாக பேசிய ஷாருக் தனக்கு இந்த விருதின் பெயரை சரியாக உச்சரிக்க முடியவில்லை என குறிப்பிட்டு, நிகழ்ச்சியின் தொகுப்பாளினியிடம் அதனை கூறும் படி தெரிவித்தார். ஆயினும் அதன் மொழி பெயர்ப்பை அவர் இவ்வாறு கூறினார்.
மனிதகுல வரலாற்றில் உலகிலேயே மிகவும் அற்புதமான சிறுத்தை விருது என்பதே அதன் பொருளாகும்
சினிமாவில் அவரது மாறுபட்ட பாத்திரங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது லோகார்னோ நகர் மிகவும் சூடாகவும், நெரிசலாகவும் இந்தியா போன்று உள்ளதாக தெரிவித்த ஷாருக் கான், தான் லோகார்னோவில் தங்கியிருந்த காலத்தில் இத்தாலிய உணவு வகை தொடர்பான தனது சமையல் திறனை வளர்த்துள்ளதாக நகைச்சுவையாக பேசினார்.
இந்த விழாவில் அவரது 2002 ஆம் ஆண்டு வெளியான “தேவதாஸ்” திரைப்படம் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் “பதான்,” “ஜவான்,” “டன்கி” உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் மூலம் சினிமாவில் மீண்டும் தனது புகழை நிரூபித்துள்ள ஷாருக் கான், தற்போது இவ்வாறான விழாக்களிலும் கலந்து கொள்கின்றார்.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இத்திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பின் போது வயதில் முதிர்ந்த ஒருவரை தள்ளி விடுவது போன்ற வீடியோ ஒன்று தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
இந்த நடத்தை ஒரு திமிரான, ஆணவம் மிக்க, முரட்டுத்தனமான, அநாகரீகமான செயல் என சமூக ஊடகங்களில் சிலர் கண்டனம் தெரிவித்தாலும்,
‘கிங் கான்’ ஜோவியலான மனநிலையில் அப்போது இருந்ததால், அவரை தள்ளுவது போன்று செய்கையையே செய்ததாக தெரிவிக்கிறார்கள்.
ஆயினும் குறித்த நபர் ஷாருக்கின் நீண்டகால நண்பர் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.