பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு மூலம் உற்பத்தியை அதிகரிக்க பெருந்தோட்டக் கம்பனிகள் எதிர்பார்த்துள்ளதாக, தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
சம்பளக் கட்டுப்பாட்டுச்சபை, தோட்ட முதலாளிமார் சங்கம், பெருந்தோட்ட மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து தொழில் அமைச்சின் செயலாளர் தலைமையில் நேற்று முன்தினம் (12) நடத்திய கலந்துரையாடலில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த சம்பளத்திற்கு ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி செலுத்தப்படுவதுடன், மேலதிகமாக பறிக்கப்படும் (18 தொடக்கம் 20 கிலோ) தேயிலை கொழுந்துக்கும் 50 ரூபா கொடுப்பவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். பெருந்தோட்ட கம்பனிகள் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், நாட்டில் தேயிலை தொழில் துறையை தொடர்ந்து முன்னெடுக்கும் நோக்கில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 25 வீதத்தால் அதிகரிக்க இணக்கம் தெரிவித்ததாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வினைத்திறனுடன் செயற்படும் பட்சத்தில், மேலதிகமாக தேயிலை கொழுந்து பறிப்பதனூடாக நாளாந்தம் கூடுதலான வருமானம் ஈட்ட முடியும் எனவும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை சுட்டிக்காட்டியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் வழக்கில், புதிய சம்பள அதிகரிப்பு தொடர்பில் இரு தரப்பினரும் செய்துகொண்ட இந்த இணக்கப்பாடு குறித்த விடங்களை நீதிமன்றத்தில் முன்வைத்த பின்னர், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்படுமென அவர் மேலும் கூறினார்.