நாட்டில் காணப்படும் வட்டி-சாராத வங்கிச் சேவைகளுக்கான முன்னோடியாகத் திகழும் அமானா வங்கிக்கு, இலங்கையின் சிறந்த இஸ்லாமிய வங்கிக்கான கௌரவம் பெருமைக்குரிய Euromoney இஸ்லாமிய நிதியியல் விருதுகள் வழங்கலில் வழங்கப்பட்டிருந்தது. Euromoney இனால் வெளிப்படுத்தப்பட்டதற்கமைய, இந்த கௌரவிப்பினூடாக அமானா வங்கியின் வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் மக்களுக்கு நட்பான வங்கியியலுக்கான ஒப்பற்ற அர்ப்பணிப்பு ஆகியன வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
Euromoney இஸ்லாமிய நிதியியல் விருதுகள் என்பது, Euromoney இன் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விருதுக் கட்டமைப்பின் அங்கமாக அமைந்திருப்பதுடன், முன்னைய 12 மாத காலப் பகுதியில் சிறந்த வினைத்திறனை காண்பித்திருந்த வட்டி-சாராத நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையிலும், தமது சந்தைகளில் அந்நிறுவனங்கள் எய்தியிருந்த தாக்கங்களை கௌரவிக்கும் வகையிலும் அமைந்திருந்ததுடன், சந்தையில் வட்டி-சாராத வங்கியியல் மற்றும் நிதியியல் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கியிருந்தமையை கௌரவிப்பதாகவும் அமைந்திருந்தது. Euromoney இன் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆய்வு அணியினரால் இந்த விருதுகளுக்கு மத்தியஸ்தம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டில், அமானா வங்கி சிறந்த நிதிப் பெறுபேறுகளை எய்தியிருந்தது. குறிப்பாக வரிக்கு பிந்திய இலாபம் 76% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 1.4 பில்லியனை எய்தியிருந்ததுடன், மூலதன இருப்பு ரூ. 20 பில்லியனாக உயர்ந்திருந்தது. புதிய முதலீட்டுடன், வங்கி துரித வளர்ச்சிக்கு முகங்கொடுத்திருந்ததுடன், காணப்படும் வாய்ப்புகளை கையகப்படுத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
விருது தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “வட்டி-சாராத வங்கியியல் முறைமையில் அமானா வங்கியின் தலைமைத்துவத்தை மீண்டும் உறுதி செய்து, சர்வதேச கௌரவிப்பை பெற்றுக் கொள்வதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க மக்களுக்கு நட்பான வங்கிச் சேவைகளை ஊக்குவிப்பதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாகவும், எமது வாடிக்கையாளர்களின் வளர்ச்சிக்கு வலுவூட்டி, வளமூட்டுவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பை உறுதி செய்வதாகவும் இந்த விருது அமைந்துள்ளது.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.