Monday, October 7, 2024
Home » நீர்க்கட்டணங்களை 7% ஆக குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

நீர்க்கட்டணங்களை 7% ஆக குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 20 முடிவுகள்

by Prashahini
August 13, 2024 1:25 pm 0 comment

– அரச துறையில் சம்பளத்திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போதுள்ள நீர்க்கட்டணங்களை 7% ஆக குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (12) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 20 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போதுள்ள நீர்க்கட்டணங்கள் 2023.08.01 அன்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறித்த கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை அமுல்படுத்துவதற்காக 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2024.07.16 ஆம் திகதியிலிருந்து இலங்கை மின்சார சபை மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ளமையாலும், எரிபொருள், இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் வட்டிக் கிரயம் போன்றவற்றின் கிரயம் குறைவடைந்திருப்பதைக் கருத்திலெடுத்து, நீர்க்கட்டணத்தை ஓரளவு வீதத்தில் குறைப்பதற்கான இயலுமை காணப்படுகின்றது.

அதற்கமைய, பின்வரும் வகையில் நீர்க்கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இல.                  கட்டண வகுதி                                                                        உத்தேச குறைக்கப்படும் வீதம் (%)
01.              சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் நகர்ப்புற

தோட்ட குடியிருப்புகள் தவிர்ந்த வீடுகளுக்கான அலகுகள்                                                  7
02.             அரச வைத்தியசாலைகள் 4.5 03. பாடசாலைகள் மற்றும் வணக்கத் தலங்கள்         6.3
ஒட்டுமொத்த குறைக்கப்பட்ட தொகை                                                                                       5.94

2. உள்நாட்டு இஞ்சி உற்பத்தி மற்றும் விலை ஒழுங்குபடுத்தல்

இஞ்சி உற்பத்திக்கான வசதிகளை வழங்கி உள்நாட்டுச் சந்தையில் நுகர்வோரின் தாங்குதிறன் மட்டத்தில் இஞ்சியின் சில்லறை விலையைக் குறைப்பதற்கான விலைமட்டத்தை ஆராய்ந்து பார்த்து, அதுதொடர்பாக பொருத்தமான விதந்துரைகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு விவசாய, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் விதந்துரைகளின் அடிப்படையில், அடுத்துவரும் மூன்றுமாத காலப்பகுதிக்குள் 3000 மெற்றிக்தொன் பச்சை இஞ்சியை இலங்கை அரச வர்த்தக (நானாவித) கூட்டுத்தாபனத்தின் மூலம் கட்டம் கட்டமாக இறக்குமதி செய்வதற்காக விவசாய, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. ஹொரண மில்லேதவத்த நகர அபிவிருத்தித்திட்டக் காணியில் முறையற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தொழிலாளர் வீடுகளுக்கு இடமாற்ற அடிப்படையில் புதிய வீட்டு அலகுகளை வழங்குதல்

ஒளடத உற்பத்திக் கிராமங்களை நிறுவும் திட்டம் வெலிக்கடை சிறைச்சாலையை இடமாற்றும் திட்டம் சிறிய மற்றும் நடுத்தரளவிலான கைத்தொழில் திட்டம் மற்றும் மஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் கீழ் பல்கலைக்கழகக் கிராமத்தை நிறுவும் திட்டம் ஆகிய அபிவிருத்தித் திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபை ஹொரண மில்லேவவத்த காணியிலிருந்து காணித்துண்டுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேற்குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள காணியில் அமைந்துள்ள முறையற்ற தோட்ட வீட்டு அலகை விரைவாக அகற்ற வேண்டியுள்ளது.

அதற்கமைய, மில்லேவவத்த காணியில் முன்மொழியப்பட்டுள்ள, அபிவிருத்தித் திட்டங்களுக்கு இடையூறாக அமையும் 54 முறையற்ற வீட்டு அலகுகளை அகற்றி, குறித்த வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு இரண்டு கட்டங்களில் தலா பத்து பேர்ச்சர்ஸ் காணித்துண்டுடன், முழுமையான உரித்துடன், பணத்தை அறவிடாமல் அவற்குவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. இலங்கை கடலோர வலயம் மற்றும் கடலோர வளங்கள் முகாமைத்துவத் திட்டம் – 2024 – 2029 இனை நடைமுறைப்படுத்தல்

1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கடலோரப் பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கையின் கடலோர வலய முகாமைத்துவத்திற்காக கடலோர வலயம் மற்றும் கடலோர வளங்கள் முகாமைத்துவத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த திட்டம் ஐந்து (05) வருடங்களுக்கு ஒருமுறை காலத்தோடு தழுவியதாக மேம்படுத்தப்படல் வேண்டும். அதற்கமைய, 2018 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தைத் திருத்தம் செய்து “இலங்கை கடலோர வலயம் மற்றும் கடலோர வளங்கள் முகாமைத்துவத் திட்டம் 2024 –2029” தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. தொல்லியல் பெறுமதியுடன் கூடிய புத்தளம் அருவாக்காலு மயோசீன சுண்ணாம்புக்கல் படிமத்திற்கு அண்டிய பிரதேசங்களைப் பாதுகாத்தல்

26 – 195 இடையிலான மில்லியன் வருடங்கள் மிகவும் பழைமையான யுகத்திற்குச் சொந்தமான தொல்லியல் காரணிகள் அடங்கிய கற்படிமங்கள் புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லுப் பிரதேச செயலகப் பிரிவின் அருவக்காலு பிரதேசத்தில் காணப்படுகின்றமையை புவிச்சரிதவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் காணப்படுகின்ற சுண்ணாம்புக்கல் படிமங்கள் மூலம் மயோசீன யுகத்திற்குச் சொந்தமான அருகிப் போகின்றதும், தற்போது உயிர் வாழ்கின்ற 40 விலங்கினங்களுக்கும் அதிகமாக சுவட்டுப் படிமங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த பிரதேசத்தைப் பாதுகாப்பதற்காக 1940 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தொல்லியல் கட்டளைச் சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க தொல்லியல் (திருத்தச்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 10 ஹெக்ரெயார் பிரதேசத்தை தொல்லியல் ஒதுக்கிடமாக பெயரிடுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. இலங்கையின் குடிநீர் துறையில் முதலீடுகளுக்கான தெரிவு செய்கின்ற அளவுகோல் சட்டகம்

துறைசார் நிபுணர்கள், பங்காள முகவர் நிறுவனங்கள் மற்றும் கல்வியியலாளர்களுடன் கூடிய நடவடிக்கைக் குழுவின் கண்காணிப்பின் கீழ் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சால் குடிநீர் துறையில் முதலீடுகளுக்கான தெரிவு செய்கின்ற அளவுகோல் சட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அளவுகோல் சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. தென்மேல் பருவக்காற்று ஆரம்பித்திருப்பதால் வெள்ளப்பெருக்கு, கடுங்காற்று உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிகப்பட்டுள்ள வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் புதுப்பித்தல்

2024.05.15 தொடக்கம் நாட்டில் தென்மேல் பருவக்காற்று மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கடுங்காற்று உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக 120,215 குடும்பங்களைச் சேர்ந்த 454,625 பேர் பாதிக்கப்பட்டார்கள். 172 முழுமையான வீட்டுச் சேதங்களும் 20,075 பகுதியளவிலான வீட்டுச் சேதங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளன. அதற்கமைய, முழுமையாகச் சேதமடைந்த 172 வீடுகளுக்கும் அதே இடத்தில் அல்லது வேறு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து வழங்குவதற்கும். பகுதியளவில் சேதமடைந்துள்ள 20,075 வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான புகையிரத நிலையங்கள் மற்றும் கட்டிடங்களில் கூரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்திப் பராமரித்தல்

புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான 300 இற்கும் அதிகமான புகையிரத நிலையங்கள் காணப்படுவதடன், அவற்றின் சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச தனியார் பங்குடமை முறையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 03 ஆம் பகுதிகளில் 1R மற்றும் 1S ஒப்பந்தத்தொகுதிக்கான ஒப்பந்தம் வழங்கல்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 03 ஆம் பகுதியின் நிர்மாண வேலைகள் 19 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 1A தொடக்கம் 1Q வரையான 17 பகுதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய 1R மற்றும் 1S ஒப்பந்தப் பகுதிகளுக்கு தகைமைவாய்ந்த உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து போட்டி விலைமனுக் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய விபரங்களுடன் பதிலளிப்புக்களுடன் கூடிய மாகா இன்ஜினியரிங் (பிறைவெட்) லிமிட்டட் 1R மற்றும் 1S ஒப்பந்தத் தொகுதிகளை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்று அங்கீகரித்தல்

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இலங்கையின் வர்த்தக, வாணிப உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தாய்லாந்தின் வர்த்தக அமைச்சர் அவர்களால் 2024.02.03 அன்று கையொப்பமிடப்பட்டுள்ளது. குறித்த உடன்படிக்கை 2024.07.12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ் உடன்படிக்கையின் 14.10 ஆம் பிரிவுக்கமைய உள்ளகச் சட்ட ரீதியான தேவைப்பாடுகள் மற்றும் செயல் ஒழுங்குவிதிகள் முழுமையடைந்துள்ளமையைக் குறிப்பிட்டு ஒருதரப்பினர் அடுத்த தரப்பினருக்கு மேற்கொள்ளும் இறுதி அறிவித்தலின் பின்னர், இரண்டாம் தரப்பினர் அறிவிப்பதன் மூலம் முப்பதாம் நாளிலிருந்து உடன்படிக்கை அமுலாகும். இவ்விடயத்தின் அடிப்படையில் இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்று அங்கீகரிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல் (பதனிடல் மற்றும் மீள் ஏற்றுமதிக்காக அங்கீகரிக்கப்பட்ட தொழில் முயற்சிகள் நறுமணப் பொருட்களை இறக்குமதி செய்தல்)

1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்;ட ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட 2393/36 ஆம் இலக்க 2024.07.18 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல் விதிகள்

தற்போது நடைமுறையிலுள்ள ஏற்றுமதி பெறுகைகள் தொடர்பான விதிகள், அதாவது “2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புத் விதிகள் (திருத்தம்)” தளர்த்துமாறு ஏற்றுமதியாளர்கள்,ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் சில அரச முகவரகங்களால் இலங்கை மத்திய வங்கிக்கு விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்ன தொடர்புடைய தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக புதிய விதிகள் வெளியிடப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, 2391/02 ஆம் இலக்க 2024.07.01 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஆக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புத் விதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் வைத்தியசாலைகளை  அபிவிருத்தி செய்யும் திட்டங்களுக்கு காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ள வேலைச்சட்டகம்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 06(1)(இ) பிரிவின் மூலம் கொழும்பு துறைமுக நகர அதிகார எல்லையில் அமைந்துள்ள மற்றும் ஆணைக்குழுவுக்கு உரித்தளிக்கப்பட்டுள்ள அரசின் விற்பனை செய்யக்கூடிய காணிகளைக் குத்தகைக்கு வழங்குவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உண்டு. அதற்கமைய, கொழும்பு துறைமுக நகரத்தில் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களில் முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்காக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவினால் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.

அண்ணளவாக வைத்தியசாலைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும் பாடசாலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பல்கலைக்கழகத்திற்கு 25 மில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்கான முன்மொழிவை ஆசிரி துறைமுக நகர மருத்துவமனை (தனியார்) கம்பனி கேட்வே சர்வதேச பல்கலைக்கழகம் (தனியார்) இற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 06(1)(இ) பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய வைத்தியசாலை பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு காணித்துண்டுகளைக் குத்தகைக்கு வழங்குவதற்காக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. பின்னவல – கித்துல்கல சுற்றுலா வலய அபிவிருத்தி

2024 வரவு செலவுத்திட்ட முன்மொழிவு மூலம் பின்னவல – கித்துல்கல சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சுக்கு 750 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் சில திட்டங்களை அமுல்படுத்துவதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தால் விதந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, பின்னவல – கித்துல்கல சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (திருத்த) சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடல்

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2022.05.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம்

குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள சட்டங்களின் கொள்கைகள், சட்ட ரீதியான வரையறைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகளுக்கான வரைபை மேம்படுத்துவதற்கான குழுவின் அறிக்கைக்கமைய குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2024.04.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்;ப்பிப்பதற்காகவும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. கலம்பு மரீனா டிவலொப்மென்ட் (பிறைவெட்) லிமிட்டட் இனை மூலோபாய முக்கியத்துவம் கொண்ட ஆரம்பநிலை வர்த்தகமாக பெயரிடல்

“ஓய்வுத் துறைமுகம்”(MARINA) அபிவிருத்தித் திட்டத்திற்காக பிறவுன்ஸ் இன்வெஸ்மன்ட் தனியார் கம்பனியின் முழுமையான உரித்துடைய கம்பனியான கலம்பு மரீனா (பிறைவெட்) லிமிட்டட் இற்கு கொழும்பு துறைமுக நகரப் பிரதேசத்திலுள்ள நான்கு காணித்துண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன.

243 படகுகள் நிறுத்தி வைக்கக்கூடியதும், முழுமையான இயலளவைக் கொண்ட கெப்பிட்டனரி, விருந்தினர்களுக்கு களியாட்ட மண்டபங்கள், உணவுப் பானங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள், பொழுதுபோக்கு மையங்கள், நிகழ்வுகளுக்கான இடவசதிகள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் இத்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கலம்பு மரீனா டிவலொப்மென்ட் (பிறைவெட்) லிமிட்டட் இனை மூலோபாய முக்கியத்துவம் கொண்ட வர்த்தகமாக பெயரிடுவதற்கும், மேற்குறிப்பிட்ட வர்த்தகத்திற்குரிய விடுவிப்புக்கள் மற்றும் ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. இலங்கைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் கல்வி ஒத்துழைப்பு நோக்கத்துடனான புரிந்துணர்வு / ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை மேற்கொள்ளல்

இலங்கையின் பல்கலைக்கழகங்களை உலகத் தரப்படுத்தல் சுட்டிகளில் தரமுயர்த்துதல் மற்றும் உயர்கல்வி ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் வெளிவிவகார அமைச்சு, தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அவதானிப்புக்கும் விதந்துரைகளுக்கும் ஏற்புடைய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புகளுக்காக பேராதனைப் பல்கலைக் கழகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் இலினோய் பல்கலைக்கழகத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான தழுவில் அங்கீகாரத்திற்காகவும், பின்வரும் புரிந்துணர்வு ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிடுவதற்காகவும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• இயலளவு விருத்திப் பயிற்சிகளை நடாத்துதல் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்/போர்ட் பல்கலைக்கழகத்துடனான ஒத்துழைப்பு உடன்படிக்கை

• தாதியத் துறையில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், இருநாடுகளுக்கிடையில் மாணவர்களின் கல்விப் பரிமாற்றம்/ துறையுடன் தொடர்புடைய கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை விருத்தி செய்யும் நோக்கத்துடன் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

• ஒளடதவியல் கல்வித் துறையில் ஒத்துழைப்பைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் மாணவர்/கல்வி ஆளணியினரைப் பரிமாற்றம் செய்தல் தொடர்பான ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் ஹனான் சீன மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான உடன்படிக்கை.

• உலகளாவிய ரீதியில் விஞ்ஞான அறிவு மற்றும் கலாச்சார சம்பிரதாயங்களை மேற்கொள்ளும் நோக்கில் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் மரிலான்ட் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

• கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் முன்னேற்றத்திற்காக கல்வியியலாளர்களை பரிமாற்றம் செய்யும் நோக்கத்துடன், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானிய மெசிடி பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

• சமுத்திரங்களை அண்டிய அரசுகளின் ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமுல்ப்படுத்தப்படும் உயர்கல்வி புலமைப்பிரிசில் நிகழ்ச்சித்திட்டத்திற்காக பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய அமைப்பு பல்கலைக்கழக சங்கத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கை.

• கல்வி ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதும் இருதரப்புக்களுக்கு இடையிலான வரலாறு கலாச்சார மற்றும் புலமைசார் உறவுகளைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு களனிப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் நாலந்தாப் பல்கலைகழகத்தின் இடையிலான உடன்படிக்கை

• கல்வி ஆராய்ச்சித் துறையின் ஒத்துழைப்பை விருத்தி செய்யும் நோக்கத்துடன் பௌத்த, பாளி பல்கலைக்கழகம் மற்றும் வியட்நாம் பௌத்த அக்கடமியுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை

19. அரச துறையில் சம்பளத்திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு

அரச சேவையில் சம்பளம்,வேதனங்கள் மற்றும் ஏனைய பணிக்கொடைகளை மீளாய்வு செய்து, அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான விதந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நிபுணத்துவக் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.05.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் உதய செனவிரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச துறையின் பிரதான தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளது.

அத்தகவல்களைப் பகுப்பாய்வு செய்த பின்னர் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டுள்ள பின்வரும் முன்மொழிவுகளுக்கு கொள்கை ரீதியாக அங்கீகாரம் வழங்குவதற்கும், குறித்த முன்மொழிவுகளை 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கி அமுல்படுத்துவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• ஒட்டுமொத்த அரச சேவையிலுள்ள அனைத்துப் பதவிகளையும் நான்கு பிரதான மட்டங்களின் கீழ் வகைப்படுத்தி ஒவ்வொரு வகுதிக்கும் இலங்கைத் தராதர வழிகாட்டல் (SLQF) மற்றும் தேசிய தொழில் நிபுணத்துவம் (NVQ) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உரிய தொழிலின் பணிப்பொறுப்புக்கள் மற்றும் விசேட தொழில்களுக்கான நிபுணத்துவத்துமுடைய ஊழியர்களை கவர்ந்திழுப்பதற்கும், தொழில்களைத் தக்கவைத்தலைக் கருத்தில் கொண்டு ஆட்சேர்ப்புத் தகைமைகளை உபவகுதிகளுக்கு வகைப்படுத்தல்.

• ஆரம்பநிலை சேவை வகுதிகளுக்கும் ஆட்சேர்ப்புக்கான அடிப்படைத் தகைமைகளாக இலங்கை தராதர வழிகாட்டல், தேசிய தொழில் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சேவைத் தேவைகளுக்கேற்ப பொருத்தமான முறையமையைப் பின்பற்றுதல்.

• ஏனைய அனைத்துச் சேவை வகுதிகளுக்கும் முறைமைப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை முறை மூலமாக மட்டும் ஆட்சேர்ப்புச் செய்தல்.

• அதற்கமைய, தகைமைக்கு ஏற்புடைய வகையில் தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு ஒழுங்குவிதிகளை துரிதமாகத் திருத்தம் செய்தல்

• 2025 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு சீராக்கல்கள் மற்றும் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள அனைத்துக் கொடுப்பனவுகளையும் ஒருங்கிணைத்து அனைத்து அரச ஊழியர்களுக்கும் (ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்யும் அடிப்படையில்) வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக மாதாந்தம் 25,000/= ரூபாவை வழங்கல்.

• அரச சேவையின் ஆகக் குறைந்த ஆரம்ப மாதாந்தச் சம்பளத்தை ஆகக் குறைந்தது 24% வீதத்தால் அதிகரித்து வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுடன் மொத்தச் சம்பளமாக ரூபா 55,000/= வரை அதிகரித்து ஏனைய அனைத்துப் பதவிகளுக்குமான அடிப்படைச் சம்பளத்தை அதற்கேற்புடைய வகையில் சீராக்கல்.

• அரச வர்த்தகக் கம்பனிகள் வங்கிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இப்புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்தல்.

• 2030 ஆம் ஆண்டாகும் போது அரச சேவையில் ஒட்டுமொத்த பணியாளர்களை பத்து இலட்சமாகவோ (1,000,000) அல்லது அதற்குக் குறைவான மட்டத்திற்கு மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

• அதற்கமைய, 2025 ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த அரச சேவையை இயன்றவளவுக்கு டிஜிட்டல்மயப்படுத்தல் (Digitalization) மற்றும் தன்னியக்க(Automation) முறை மூலமான இலத்திரனியல் கட்டமைப்பு ரீதியான அரச நிர்வாக முறைமையை (E- Governance) அறிமுகப்படுத்தல் மற்றும் அதற்கான அரச முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்குதல்.

• அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களும் உள்ளடங்கலாக ஆகக் குறைந்தது 1000 ரூபா மாதாந்தப் பங்களிப்புடன் மிகவும் கவர்ச்சிகரமான நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையிலான மருத்துவக் காப்புறுதி முறைமையை 2025 ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்.

• இயன்றவரை வெளியகச் சேவைகள் (Outsourcing) போன்ற முறைமைகள் மூலம் அரச செலவுகளின் சுமையைக் குறைக்கும் வகையில் உயர்வான வினைத்திறனான வகையில் நியம முறைமைகளைப் பின்பற்றி சேவைகளைப் பெறுதல்.

• அடையாளம் காணப்பட்ட திணைக்களங்கள் / கூட்டுத்தாபனங்கள்/ நியதிச்சபை நிறுவனங்களை பங்குச் சந்தையில் அட்டவணைப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனிகளாக (Public Liability Company) மாற்றுவதற்கான மீள்கட்டமைப்பு செயற்திட்டத்தை அமுல்படுத்துதல்.
• தகுந்த வேலை ஆய்வை மேற்கொண்டு, ஒட்டுமொத்த அரச துறை ஆளணியினர் மற்றும் சேவைகள் தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வை மேற்கொள்வதற்காக 2025 ஆண்டில் நடவடிக்கை எடுத்தல்.

• அதற்கமைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் செயலாற்றுகை சுட்டிகளை தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் சம்பள உயர்வை வழங்கல்.

• 2020 அம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்றுள்ள அரச ஊழியர்களுக்கு உரித்தான சம்பள உயர்வை வழங்கி, அவர்களுடைய ஓய்வூதிய சம்பளத்தை திருத்தம் செய்து ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல்.

• ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுகள், தற்போது சேவையிலுள்ள அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 50% வீதத்திற்குச் சமமான வகையில் 2025 ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கல்.

• தற்போது காணப்படுகின்ற வரிக் கொள்கையில் இச்செலவுகளை முகாமைத்துவத்தி, இச்சம்பள முறைமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள சம்பள முறைமையை 2025.01.01 தொடக்கம் அரச நிதி நிலைமைகளையும் கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தல்.

20. லயின் அறைகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்காக “ஆறுதல்” (அஸ்வெசும) நலன்புரி நன்மைகளின் அளவுகோல்களை ஏற்புடையதாக்கிக் கொள்ளல்

நலன்புரி நன்மைகள் சபை தற்போது ‘ஆறுதல்’ நலன்புரி நன்மைத் திட்டத்தை அமுல்படுத்தி வரருகிறது. 2002 ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட 2022ஆண்டின் 1 இலக்க நலன்புரி நன்மை கொடுப்பனவு (கொடுப்பனவை பெறுவதற்கு தகைமையான நபர்களைத் தெரிவு செய்தல்) ஒழங்குவிதிகளுக்கு அமைய திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். அந்த ஒழுங்குவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்யும் நபர்கள் அல்லது குடும்பங்கள் ‘ஆறுதல்’ நன்மைகளை பெறுவதற்கான உரித்தைப் பெறுவார்கள். பெருந்தோட்டத் துறையில் உள்ள தோட்டங்களில் தனி வீடுகள் இல்லாதிருப்பதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் தனிக் குடும்பங்கள் கூட்டாக ஒரே லயின் வீடுகளில் வசிக்கின்றனர்.

தற்போதைய நடைமுறைக்கமைய, குறித்த சந்தர்ப்பத்தில் வேறுவேறான குடும்ப எண்ணிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல், லயின் அறைகளில் வாழ்கின்ற அனைத்து நபர்களும் ஒரு குடும்ப அலகாக கருதப்படுகின்றனர். குறித்த நலை மேற்குறித்த குடும்பங்களுக்கு பாதகமானது என்பது தெரியவருகிறது.

எனவே, 2022 ஆண்டின் 1 இலக்க நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை (கொடுப்பனவுகளுக்குப் பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்தல்) கட்டளைகளின் பிரகாரம்,“ஆறுதல்” (அஸ்வெசும) முன்மொழிவுத் திட்டத்திற்கு தகைமைகளை நிர்ணயிக்கும் போது லயின் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு செயலாற்றுமாறு நலன்புரி நன்மைகள் சபைக்கு உத்தரவிடுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x