எதிர்ப்பாளர்களுக்கு எதிரான மிருகத்தனமான மற்றும் வன்முறை ஒடுக்குமுறை பிரயோகிக்கப்படுவதாக பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது பலூகிஸ்தான் ஆர்வலர் மஹ்ராங் பலூச் குற்றஞ்சாட்டினார்.மேலும் முழு பிராந்தியத்தின் நிலைமையும் “மிகவும் நெருக்கடியானது” என்றும் அவர் கூறினார்.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இந்த உத்தரவுகளை பிறப்பித்தவர்கள் யார் என்று கேள்வி எழுப்புமாறு பத்திரிகையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில், மஹ்ராங் பலோச் கருத்து வெளியிட்டதோடு, “குவாதர் மற்றும் முழு பிராந்தியத்தின் நிலைமை இப்போது மிகவும் சிக்கலானது.மில்லியன் கணக்கான உயிர்கள் ஆபத்தில் உள்ளன.”என்றும் தெரிவித்துள்ளார்.
“கடந்த எட்டு நாட்களாக நாங்கள் அமைதியான முறையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களின் அனைத்து கோரிக்கைகளும் அரசியலமைப்புக்குட்பட்ட சட்டபூர்வமானவை, இந்த கோரிக்கைகள் தொடர்பாக நாங்கள் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறையையும் அதிகாரத்தையும் தொடர்ந்து பயன்படுத்துகின்றன. பேச்சுவார்த்தையின் போது அமைதியான போராட்டக்காரர்கள் மீது நேராக துப்பாக்கிச் சூடு நடத்த இந்த உத்தரவுகளை யார் பிறப்பித்தனர், ஏன் இந்த உத்தரவை பிறப்பித்தார்கள் என்று ஊடகவியலாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்ப வேண்டும்.
பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது, நுஷ்கியில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர் என்றும் பலூச் ஆர்வலர் கூறினார்.
குவாதரில் அமைதிப் பேரணியின் மீது படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதோடு 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குவாதரில் “காட்டுமிராண்டித்தனம் மற்றும் ஒடுக்குமுறைக்கு” எதிராக போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, பாகிஸ்தான் அரசாங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது, தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
“யாருடைய உத்தரவின் பேரில் மகுரான் பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.வீதித் தடைகள் போடப்பட்டன.கடைகள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டன, அமைதியான உள்ளிருப்பு போராட்டத்திற்கு எதிராக நெருக்கடி போன்ற சூழல் உருவாக்கப்பட்டது? உள்ளிருப்புப் போராட்டத்தில் எங்கள் தலைமையைக் கொன்றுவிடுங்கள் என்று திரும்பத் திரும்ப உத்தரவு பிறப்பித்து, தொடர்ந்து மிரட்டி, துன்புறுத்தி, எங்களைத் தூண்டிவிட முயல்வது யார்?
“பாகிஸ்தானிய பிரதான ஊடகங்கள் மற்றும் பலுகிஸ்தான் பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் போர் ஆதாயவாதிகளின் கதைகளுக்கு அப்பால் குவாதரின் தற்போதைய நிலைமையை நீங்கள் உண்மையிலேயே புரிந்து கொள்ள விரும்பினால், இந்தக் கேள்விகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று பலூச் தனது பதிவில் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், மாநில அதிகாரிகளின் “மிருகத்தனமான அடக்குமுறையை” தொடர்ந்து இந்த நிகழ்வு விரைவில் உள்ளிருப்பு போராட்டமாக மாறியது, அவர்கள் கூட்டத்தைத் தடுக்க பலத்தை பயன்படுத்தி பல கைதுகளை செய்தனர். இந்த அடக்குமுறை குறிப்பிடத்தக்க சக்தியை உள்ளடக்கியதாக அமைந்தது. இது பரவலான அமைதியின்மைக்கு வழிவகுத்தது.
போராட்டங்கள் தீவிரமடைந்து பலுகிஸ்தான் முழுவதும் பரவி, பேரணிகள், வேலைநிறுத்தங்கள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடல் என பரிணமித்தது.
இந்த பரவலான நடவடிக்கைகள் பலூச் மக்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியையும், நீதி மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் விடுதலையைக் கோரும் உறுதியையும் பிரதிபலிக்கின்றன.
பலூசிஸ்தானில் பலூச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு இடையே தொடர்ந்து பதற்றங்கள் மற்றும் மோதல்கள் நீண்ட காலமாக நிலவி வருகிறது. சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், பலவந்தமாக காணாமல் போதல்கள் மற்றும் சித்திரவதைகள் உட்பட பல மனித உரிமை மீறல்களை இப்பகுதி கண்டுள்ளது. (ANI)