செல்வ செழிப்புடன் வாழ விரும்புபவர்கள், கடவுளின் கிருபையை பெற வேண்டும். அந்த கடவுளின் கிருபையை பெற, ஆதாரமாக இருப்பது ஆண்மை பொருந்திய உழைப்பு மட்டுமே. அனைத்தும் துறந்து ஆண்மையுடன் கூடிய உழைப்பை மேற்கொண்டவனுக்கு, கடவுள் அருள்வார் அல்ல அருளியே தீர வேண்டும். எனவே உழைப்பை பராமாத்மா விரும்புவார். உழைத்தவர் உயர்வார். உழைப்பது அவமானமல்ல. எவனொருவன் உழைப்பை நம்பி, திட்டமிட்டு, உறுதியுடன் செயல்படுகிறானோ, அவன் மஹான் எனப் போற்றப்படுவான். இப்படிப் பட்டவனைத் தான் இவ் உலகம் தேடுகிறது.
தகுதியுடையவனே வெகுமதி பெறுகிறான். இது ஒரு தெய்வ நெறியாகும். ‘எந்த ஒரு கோட்பாடும் கடவுளால் உருவாக்கப்பட்டு அவராலே செயல் வடிவம் பெறும்’ என்பதே இறைச் சட்டம். இதை கடவுளே பின்பற்றவும் செய்ய வேண்டும். அவ்வாறு அவர் பின்பற்றாமல் போனால் இந்த பிரபஞ்சம் செயல்பட முடியாது. ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டு அதை அலட்சியப்படுத்துவதோ அல்லது மீறுவதோ மானமுள்ள செயலாகாது. படைப்பு என்னும் சக்கரம் கோட்பாடு என்னும் அச்சாணியின் உதவியால் தான் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த கோட்பாட்டை உருவாக்கிய கடவுளே அதனை மீற முடியாது. அப்படி மீறிவிட்டால் அந்த கோட்பாடு அர்த்தமற்று போகும்.
உழைப்பவனை உயர்த்த வேண்டும் என்பது கடவுளின் கோட்பாடு. அந்தக் கோட்பாட்டின்படி உழைப்பவன் அதற்குரிய ஊதியம் பெற்றடைவான். ஆண்மை பொருந்திய உழைப்பாளியை கைதூக்கி விடும் கட்டாயம் கடவுளுக்கு இருக்கிறது. கடவுளின் ஆதரவு உழைப்பவனுக்கு இருக்கும் பொருந்திய போது எந்த சக்தியும், அரசும் அதை தடுக்க முடியாது.ஆண்டவன் கட்டளைக்கு முன் அரச கட்டளை அடி பணியும்.
மனவலிமை இழப்பது அல்லது தாழ்வு மனப்பான்மை கொள்வது என்பது மனிதனுக்கு மனிதனே தேடிக் கொள்ளும் ஒரு சாபக் கேடாகும். சரீர பலமிருந்தும், வெற்றி பெறுவதற்கான சாதனங்கள் உள்ள போதும். தாழ்வு மனப்பான்மை கொண்டவன், மனவலிமை இல்லாதவன் வாழ்வில் வெற்றி பெற இயலாது. உடல் வலிமை இல்லாத போதும், மன வலிமை உள்ளவன் வெற்றி பெறுவதற்கான சாதனங்களை உருவாக்கிக் கொள்வான்.
ஏதோ சில காரணங்களினால், சில சூழ்நிலைகளில் ஒருவன் மனவலிமை இழந்து விட்டான் என்றால், அவன் அந்த சாபக்கேட்டிலிருந்து வெளிவர முடியாது என்றில்லை. முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை. சூழ்நிலை காரணமாக மனவலிமை இழந்தவன், அதிலிருந்து மெல்ல மெல்ல விடுபட முயற்சிக்க வேண்டும். அதற்காக அவன் தன் உடல் சக்தி முழுமையையும் ஈடுபடுத்தி தன் ஆண்மையை நிலை நாட்ட வேண்டும். தோல்வியடைந்ததும் அவநம்பிக்கை கொள்ளாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். நிதானமாக முயற்சிக்கும் போது மனவலிமையும், நற்தகுதிகளும் நிச்சயம் உருவாகும்.