இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ முதன் முதலாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கவிருக்கும் இரு விண்வெளி வீரர்களுக்கும் அமெரிக்காவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளன.
இதன் நிமித்தம் இந்த இரண்டு வீரர்களும் கடந்த வாரப் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளனர். இவர்களுக்கு டெக்ஸாஸ் மற்றும் ஹுஸ்டனில் உள்ள ஜோன்சன்ஸ் விண்வெளி மத்திய நிலையத்தில் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், ‘மனிதர்களை விண்வௌிக்கு அனுப்பி வைக்கும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் கீழ் முதற்தடவையாக இருவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இந்திய விமானப்படையில் சோதனை விமானிகளாக பணியாற்றும் விங் கமாண்டர் சுபான்சு சுக்லாவும் குரூப் கப்டன் பிரசாந்த் நாயரும் இதன் நிமித்தம் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இப்பயணத்தின் போது தெரிவு செய்யப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப செயல் விளக்க சோதனைகளை மேற்கொள்வர். அத்தோடு இப்பயணத்தின் மூலம் இவர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவு மற்றும் அனுபவங்கள் ககன்யான் திட்டத்திற்கு பெரிதும் பயன்மிக்கதாக அமையும்.
இவை இவ்வாறிருக்க, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதில் இஸ்ரோவுக்கும் நாசாவுக்கும் இடையில் ஒத்துழைப்பு வலுப்பெறவும் இவர்களது பயணம் வழிவகுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.