2034 ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை சவூதி அரேபிய இராச்சியத்தில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதற்காக அந்நாட்டு அரசாங்கம், மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் தயாராகி வருகின்றன.
சவூதி அரசாங்கம் தமது இலட்சிய திட்டமான விஷன் 2030 திட்டத்தின் கீழ் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அந்நாட்டில் அபிவிருத்திகளை மும்முரமாக செய்து வருகின்றது. இவ்வபிவிருத்திகள் சுற்றுலா, பொருளாதாரம், தொழிநுட்பம், உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, கலாசாரம் மற்றும் விளையாட்டு போன்ற சகல துறைகளையும் இலக்கு வைத்ததாக அமைகின்றன.
அந்த வகையில் 2034 FIFA கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டிகளை நடத்துவதற்கான உத்தியோகபூர்வ ஏலத்தில் சவூதி தனது ஏலப்புத்தகத்தை சமர்ப்பித்துள்ளது. அதில் ஐந்து முக்கிய
நகரங்களான ரியாத், ஜித்தா, அல் கொபார், அபா மற்றும் NEOM போன்ற நகரங்களில் போட்டிகளை நடத்துவதற்காக முன்மொழிந்துள்ளது. இந்த ஐந்து நகரங்களில் 11 புதிய மைதானங்கள் உட்பட 15 அதி நவீன மைதானங்கள் இடம்பெறும். புதிய மன்னர் சல்மான் விளையாட்டரங்கம் உட்பட 8 மைதானங்களை ரியாத் நகரில் அமையப் பெற்றுள்ளன. இதில் 92,000 பார்வையாளர்கள் வரை அமர்த்தப்படலாம். இதிலேயே தொடக்க மற்றும் இறுதிப் போட்டிகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயிற்சி முகாம்களுக்கான 10 இடங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் FIFA நடைபெறும் காலத்தில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஐந்து நகரங்களும் 230,000 அறைகள் வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 15 நகரங்களில் மொத்தம் 132 பயிற்சி இடங்கள் முன்மொழியப்பட்டுள்ளதோடு, 72 மைதானங்களும் முன்மொழியப்பட்டுள்ளன. FIFA பார்வையிட வரும் ரசிகர்களுக்காக 10 முக்கிய பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்ட தளங்களும் ஏலப் புத்தகத்தில் முன்மொழியப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட முக்கிய ஐந்து நகரங்களிலும் ஒவ்வொரு முக்கிய தளங்கள் தேரந்தெடுக்கப்பட்டுள்ளன. ரியாத் நகரில் உள்ள மன்னர் சல்மான் பூங்கா, ஜித்தா வாட்டர் ஃபிரண்ட், அபாவில் உள்ள அல் பிஹார் சதுக்கம், நியோமில் உள்ள மெரினா மற்றும் அல் கோபரில் உள்ள மன்னர் அப்துல்லா பூங்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
‘Growing. Together’ என்ற மகுட வாசகம் தாங்கி சமர்பிக்கப்பட்ட இந்த ஏலப்புத்தகம் அந்நாட்டுத் தலைமைகளின் முழுமையான ஆதரவோடும் வழிகாட்டலோடும் தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஏலப் புத்தகம், சவூதி அரேபியாவின் இந்நிகழ்வை கோலாகலமாக நடத்துவதற்கான உயரந்த விரிவான திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, சவூதியின் வரலாற்று ரீதியான பாரிய மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது.
2034 FIFA உலகக் கிண்ணத்தை நடத்தும் சவூதி அரேபியாவின் முயற்சிக்கு 140க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து வரலாறு காணாத ஆதரவு கிடைத்துள்ளது என்று சவூதி கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) தலைவர் யாசர் அல்-மிசேஹால் உறுதி செய்துள்ளார்.
“இந்த உலகளாவிய நிகழ்வை நடத்துவதற்கான எங்கள் முயற்சியின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் அனைத்து அரசாங்கத் துறைகளுக்கும் இடையே முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு உள்ளது” எனவும் “2034 இல் சவூதி மண்ணில் உதைப் பந்தாட்ட உலகக் கிண்ண வரலாற்றில் முன்னில்லாதவாறான ஒரு புது வடிவிலான போட்டியையும் நடாத்துவோம்” என்றும் ரியாத் நகரில் நடைபெற்ற சவூதின் ஏலப் புத்தக சமர்ப்பிப்பு குறித்த அதிகாரப்பூர்வ செய்தி மாநாட்டில் அல்-மிசேஹால் கூறினார்.
சவூதியின் விஷன் 2030 திட்டமானது குறிப்பிடத்தக்க பாரிய வளர்ச்சியை அந்நாட்டுக்கு அளித்துள்ளது எனவும், சவூதி அரேபியாவை உலகம் பார்க்கும் வகையல் கதவுகள் திறக்கப்பட்ட ஒரு நாடாகவும் ஆக்கியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார், அத்தோடு FIFA இனை சவூதியில் நடத்துவது அந்நாட்டு மக்களின் ஒரு பெரிய கனவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காலித் ரிஸ்வான்