தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1700 சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று (12) சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி தீர்வு எட்டப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு மூலமாக ரூ.1700 சம்பளம் வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து ரூ.1700 சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்கள் கை பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ரூ.1700 சம்பளம் கிடைக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் செந்தில் தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அன்று 1000 ரூபாய் சம்பளம் பெற்றுத்தருவதாக தெரிவித்தேன் அதனை பெற்றுக்கொடுத்தேன். அதேபோல் 1700 ரூபாய் சம்பளம் பெற்றுத்தருவதாக தெரிவித்தேன் இதனையும் பெற்றுக்கொகொடுத்துவிட்டேன்.
ஆகவேதான் மக்களிடம் வழங்கப்படும் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும். இந்த 1700 ரூபாய் சம்பள வெற்றியினை மிகப்பெறிய வெற்றியாக கருதுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு, அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.