Saturday, December 14, 2024
Home » இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் வயோதிப பெண் சடலமாக மீட்பு

இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் வயோதிப பெண் சடலமாக மீட்பு

by Prashahini
August 12, 2024 11:28 am 0 comment

புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நல்லாந்தளுவ பகுதியில் வயோதிப பெண்ணொருவர் நேற்று (11) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மதுரங்குளி – நல்லாந்தளுவ பிரதேசத்தில் வசித்து வந்த 71 வயதான செல்ல மரிக்கார் ஐனா உம்மா எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட குறித்த வயோதிப பெண் நீண்ட காலமாக தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில் உள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் (10) இரவு வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்குச் சென்றுள்ளதுடன், இரவு நேர உணவை உட்கொண்ட பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (11) பிற்பகல் 3.00 மணியளவில் வயோதிப பெண்ணின் உறவினர்கள் இருவர் வீட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும், அந்த வயோதிப பெண் தங்கியிருந்த வீட்டின் முன் கதவு திறந்திருந்த நிலையில் அவரை தேடியுள்ளனர் என சொல்லப்படுகிறது.

பின்னர், வீட்டுக்குள் சென்று படுக்கை அறையில் பார்த்த போது அந்த வயோதிப பெண் இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் பற்றி அந்த வயோதிப பெண்ணின் மகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், இதுதொடர்பில் பொலிஸ் அவசர பிரிவினருக்கும், மதுரங்குளி பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மதுரங்குளி பொலிஸாரும், புத்தளம் பிரிவு பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த வயோதிப பெண் தங்கியிருந்த வீட்டின் மூன்று ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் இடம்பெற்ற இரவு வயோதிப பெண் தனது மகளின் வீட்டுக்கு சென்று மீண்டும் தனது வீட்டுக்கு வரும் முன்னர் சந்தேகநபர்கள் இவ்வாறு வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே பதுங்கி இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு பொலிஸ் மோப்ப நாயும் அழைத்துவரப்பட்டு அந்த வயோதிப பெண் தங்கியிருந்த வீடு மற்றும் வளவு என்பனவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அத்துடன், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார, பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியந்த ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து மேற்பார்வை செய்து, மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.சம்சுல் ராபி, சடலத்தை பார்வையிட்டு, சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை முன்னெடுத்ததுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நல்லாந்தளுவ பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமாரவின் ஆலோசனையில், மதுரங்குளி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் லியனகேவின் மேற்பார்வையில் ,மதுரங்குளி பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் குணவர்தனவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT