பங்களாதேஷில் இப்போது முகமது யூனுஸ்(வயது 84) தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் 16 பேரைக் கொண்ட வல்லுநர் குழுவும் பதவியேற்றுள்ளது. வங்கதேசம் மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், அந்நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வங்கதேசத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பதவியேற்றார். இது அந்நாட்டில் பிரதமருக்கு இணையான பதவி என்று சொல்லப்படுகிறது. நேற்றுமுன்தினம் மாலை அவர் டாக்காவில் பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 16 பேர் பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கவில்லை. மாறாக ஆலோசகர்களாகப் பதவியேற்றார்கள்.
இந்த இடைக்கால அரசில் இருப்போரில் ஒரே ஒருவர் மட்டுமே இராணுவ பின்புலம் கொண்டவராக இருக்கிறார். மற்றவர்கள் சாதாரண நபர்களாகவே உள்ளனர். வரலாறு காணாத நெருக்கடியில் வங்கதேசம் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்நாட்டை இந்தக் குழு வழிநடத்த உள்ளது. மேலும், தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கைமாறுவதையும் இவர்கள் உறுதி செய்வார்கள். இக்குழு தேர்தலை மேற்பார்வையிடும்.
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்களைத் தலைமையேற்று நடத்திய மாணவர் குழுவில் இருந்து நஹித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத் ஆகிய இரண்டு மாணவர்களும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் சில இடங்களில் வன்முறை தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.