Wednesday, September 11, 2024
Home » காசாவில் சரமாரி தாக்குதலுக்கு இடையே பதில் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகிறது இஸ்ரேல்

காசாவில் சரமாரி தாக்குதலுக்கு இடையே பதில் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகிறது இஸ்ரேல்

by mahesh
August 9, 2024 8:43 am 0 comment

காசாவில் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய சரமாரித் தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு, ஈரான் மற்றும் அதன் ஆதரவு போராளிகளின் பதில் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இஸ்ரேல் அதற்காக முழுவீச்சில் தயாராகி வருகிறது.

காசா போர் ஒரு வருடத்தை நெருங்கியுள்ள நிலையில் மத்திய காசாவில் உள்ள அல் புரைஜ் அகதி முகாம் மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் வீடு ஒன்றை இலக்கு வைத்தே தாக்குதல் இடம்பெற்றதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

அதேபோன்று காசா நகரில் அல் ஷஹாபா வீதியில் உள்ள ஷல்தான் குடும்ப வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஜபலியா அகதி முகாமில் உள்ள ரியான் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டு மேலும் 77 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,699 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 91,722 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தப் போர் காசாவில் பெரும் மனிதாபிமான நெருக்கடி ஒன்றை ஏற்படுத்தி இருப்பதோடு அங்குள்ள கழிவு நீரில் போலியோ தொற்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காசாவுக்கு 1.2 மில்லியன் போலியோ தடுப்பு மருந்துகளை அனுப்ப திட்டமிட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும் காசாவில் இஸ்ரேல் தொடரும் தாக்குதல்கள் இந்த தடுப்பு நடவடிக்கைகளுக்கு தடையாக இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இஸ்ரேல் புரிந்திருக்கும் அத்துமீறல்களுக்குப் பதிலடி கொடுத்தாக வேண்டும் என்று ஈரான் மீண்டும் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தன்னைத் தற்காத்துகொள்ளும் உரிமையைச் செயல்படுத்துவதைத் தவிர ஈரானுக்கு வேறு வழி இல்லை என்று அந்நாட்டின் பதில் வெளியுறவு அமைச்சர் அலி பகரி கானி குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மையில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே ஈரானில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேலே பொறுப்பு என்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நேற்று முன்தினம் அவசரமாகக் கூடிய இஸ்லாமி ஒத்துழைப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

‘இந்த கொடூரமான தாக்குதலுக்கு சட்டவிரோத ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும், இது ஈரானின் இறையாண்மையின் தீவிரமான மீறல்’ என்று 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட முஸ்லிம் நாடுகளின் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான பதில் தாக்குதல் ஒன்று தொடர்பில் ஈரான் மற்றும் அதன் கூட்டணியான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து எச்சரித்து வருவது பிராந்தியத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதோடு அதற்கு இஸ்ரேல் தீவிரமாக தயாராகி வருகிறது.

‘இஸ்ரேலிய மக்கள் உஷார் நிலையில் இருப்பது எனக்குத் தெரியும். பொறுமையாகவும் அமைதியாகவும் இருங்கள் என்ற ஒன்றே ஒன்றை மாத்திரம் தான் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புதிதாக இராணுவத்தில் இணைந்தோர் முன் நேற்று முன்தினம் உரையாற்றும்போது தெரிவித்தார்.

‘நாம் தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் இரண்டுக்கும் தயாராக இருப்பதோடு நாம் எமது எதிரிகளை தாக்கும் அதேநேரம் எம்மை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்றும் தெரிவித்தார். இஸ்ரேல், ஹமாஸ், ஹிஸ்புல்லா, யெமனில் ஹூத்திக்கள் என்று பல முனைகளில் பாதுகாப்பு சவாலை எதிர்கொண்டுள்ளது.

இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதோடு அதன் வான் தாக்குதல் எச்சரிக்கை அமைப்பு, குறுஞ்செய்தி எச்சரிக்கை உட்பட எச்சரிக்கை முறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு இஸ்ரேலிய துறைமுக நகரான ஹைபாவில் பொதுமக்களுக்கான வெடிகுண்டு முகாம்களில் டிஜிட்டல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தாக்குதல் ஒன்றின்போது அது தானாக செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நகரின் பாதுகாப்பு மற்றும் அவசர சேவை பிரிவின் பணிப்பாளர் யயிர் சில்பர்மன் குறிப்பிட்டுள்ளார்.

தேவைப்பட்டால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு போதுமான இடவசதியுடன் தற்காலிக தங்குமிடங்களாக பல நிலத்தடி வாகன நிறுத்துமிடங்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய இஸ்ரேலிய நகரான ரம்லாவில், தேசிய அம்புலன்ஸ் சேவை இரத்த தானங்களை நடத்த இரத்தத்தை சேகரித்து வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x