இலங்கை 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது. அதன் விளைவாக மக்கள் கடும் நெருக்கடிகளுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாகி இருந்தனர். அந்தச் சூழலில் இந்நாட்டுக்கு இந்தியா, பங்களாதேசம் உள்ளிட்ட நாடுகள் தவிர்ந்த எந்தவொரு நாடும் உதவவோ ஒத்துழைப்புகளை நல்கவோ முன்வரவில்லை.
அவ்வாறான சூழலில் அன்றைய ஆட்சியாளர்கள் பதவிகளை விட்டு விலகினர். அந்த இக்கட்டான நிலையில் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி தீர்மானங்களை எடுத்து நாட்டின் தலைமையை ஏற்கவோ பொருளாதார ரீதியிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவோ எவரும் முன்வராத நிலைமை ஏற்பட்டது.
அவ்வாறான சூழலில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை முன்னெடுத்தார். கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமானவையாக அமைந்திருந்தன. அதன் பயனாக குறுகிய காலப்பகுதியில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்சிபெறத் தொடங்கிய நாடு வங்குரோத்து நிலையில் இருந்தும் விடுதலையானது.
இந்தப் பொருளாதார வீழ்ச்சியில் இருந்தும் வங்குரோத்து நிலையில் இருந்தும் நாடு எடுத்த எடுப்பில் மீட்டெடுக்கப்படவில்லை. இதற்காக அர்ப்பணிப்புமிக்க பணிகள் ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வேலைத்திட்டங்கள் நடைமுறைச்சாத்தியமாக அமைந்திருந்தன. அதன் பயனாக பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் மக்கள் முகம்கொடுத்த அசௌகரியங்களும் நெருக்கடிகளும் நீங்கத் தொடங்கின. அந்த வேலைத்திட்டங்களின் பிரதிபலன்கள் மக்களைச் சென்றடையத் தொடங்கின.
இந்தப் பின்புலத்தில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்து முன்வந்தது. அந்த வகையில் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு நல்குவது தொடர்பில் திறைசேரி, நிதியமைச்சு உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் விரிவாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கம் காணப்பட்டு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பக்கபலமாகவும் அமைந்துள்ளது.
ஆனால் இம்முறை சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதும் அவ்வளவு இலகுவான காரியமாக இருககவில்லை. ஏனென்றால் ஏற்கனவே நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக 16 தடவைகள் இணக்கம் காணப்பட்டுள்ளன. இருந்தும் அந்த இணக்கப்பாடுகள் முழுமைப்படுத்தப்படவில்லை.
அதனால் இம்முறை சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக விரிவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதி நாட்டுக்கு வழங்கி வரும் செயற்றிறன்மிக்க தலைமையின் பயனாக சர்வதேச நாணய நிதியம் இலங்கையை மீளக்கட்டியெழுப்ப உதவி ஒத்துழைப்பு நல்க முன்வந்துள்ளது.
இந்த பின்புலத்தில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனும் எமக்கு கடன் வழங்கும் நாடுகளுடனும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் எதனையும் மீற முடியாது. அத்தோடு தற்போதுள்ள இலக்குகளையும் வரையறைகளையும் மாற்றவும் முடியாது. அவற்றை மீறினால் எமக்கு நிதியுதவி கிடைக்காது. அதன் விளைவாக மீண்டும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாக நேரிடும் என்றுள்ளார்.
அதுதான் உண்மை. இருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் மாற்றம் செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் என்பது ஒரு உலகளாவிய நிதியுதவி வழங்கும் நிறுவனமாகும். அது அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்யக்கூடிய நிறுவனமல்ல. அந்த வகையில் இந்நிதியம் இலங்கையுடன்தான் இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவி ஒத்துழைப்பு நல்குவதற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறது.
தேர்தல் காலம் என்பதற்காக விரும்பிய வாக்குறுதிகளை வழங்கி அற்ப அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யலாகாது. அது நாட்டுக்கும் மக்களுக்கும்தான் பாதகமாக அமையும். மக்களின் வாக்குகளை வசீகரிப்பதற்காக உண்மைக்குப் புறம்பான தகவல்களை மக்களுக்கு வழங்குவது முறையல்ல. நிறைவேற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்குவதும் தவறாகும்.